Skip to main content

“மகளிர் நலனைப் பாதுகாக்க திமுக அரசு துணை நிற்கும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

The DMK government will stand by to protect the welfare of women Minister Udayanidhi Stalin

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் மகளிர் உரிமை தொகைக்கான ஏடிஎம் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகள் 500 பேருக்கு மகளிர் உரிமை தொகைக்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்துப் பேசுகையில், “இந்தியாவே திரும்பி பார்க்கும் முன்னோடி திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் டெபிட் கார்டு பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு. பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் முக்கியமானது. பெண்கள் சுதந்திரமாக செயல்பட அரசியல் பேச வேண்டும். பெண்கள் படிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

மேலும் இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “ஆண்களும், பெண்களும் சமம் என மகளிருக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர். அவரின் நூற்றாண்டில் அவரது பெயரிலான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 மகளிருக்கு டெபிட் கார்டுகளை இன்று வழங்கி வாழ்த்தினோம். உழைக்கும் மகளிருக்கான உதவித் தொகையாக இல்லாமல் உரிமைத் தொகையாக செயல்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயன்களையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் எடுத்துரைத்து உரையாற்றினோம். மகளிர் நலனைப் பாதுகாக்க திமுக அரசு என்றும் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை” - முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 27/02/2024 | Edited on 28/02/2024
reputation is unmatched CM MK Stalin resilience

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி (25.02.2024) நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் என்ற தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்துகொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து உடனடியாகத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.2.2024) தலைமைச் செயலகத்தில் சண்முகையா - வடக்குத்தியாள் அத்தம்பதியரின் வீரதீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வெகுமதியாக வழங்கி பாராட்டினார். அப்போது  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!. எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

reputation is unmatched CM MK Stalin resilience

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “விபத்துக்குள்ளான லாரி கவிழ்ந்து கிடந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, டார்ச்லைட் அடித்து எச்சரிக்கை சிக்னல் கொடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் தென்காசி பகுதியைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான வயதில் முதிய தம்பதியினர் சண்முகையாவும் வடக்கத்தி அம்மாளும். இவர்கள் இருவரும் நொடிப்பொழுதில் சிந்தித்து துரிதமாகச் செயல்பட்ட காரணத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர். இந்த தம்பதியின் துணிச்சலைப் பாராட்டி நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கி பாராட்டினோம். சண்முகையா - வடக்கத்தி அம்மாள் தம்பதியினரின் மனித நேயமும் - வீரமும் போற்றுதலுக்குரியவை. அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“ஆர்ப்பாட்டத்தைக் கைவிட வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
"Abandon the struggle" - Minister Anbil Mahesh's request!

இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு கல்விப் பணியாற்றிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்குச் சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ. 44 ஆயிரத்து 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50 ஆயிரம் ஆசிரியர்களின் இன்னல்களைத் தீர்க்கும் வகையில் திமுக அரசு கால முறை ஊதியத்தினை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் திமுக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும் அரசாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

"Abandon the struggle" - Minister Anbil Mahesh's request!

இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்றுத் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன். கல்வியாண்டின் இறுதி நிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வுப் பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.