ADVERTISEMENT

விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை; மார்ச் 23ம் தேதி தேர்வு முகாம்

10:19 AM Mar 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை முகாம் மார்ச் 23ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, விளையாட்டுத் துறையில் சாதனை புரிவதற்கு ஏற்ப, நல்ல பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் இயங்கி வருகின்றன. ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்படுகின்றன.

இந்த விடுதிகளில் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு முகாம், சேலம் காந்தி விளையாட்டு அரங்கத்தில் மார்ச் 23ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துப் பந்து, பளுதூக்குதல், கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை போட்டிகளும்; மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள் சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துப்பந்து, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் போட்டிகளும் நடைபெற உள்ளன.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும், ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து, மார்ச் 22ம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT