ADVERTISEMENT

மாணவ சுகாதார தூதர்கள் ! -சென்னை மாநகராட்சியின் புதுமை வீடியோ ! 

03:45 PM Oct 25, 2019 | kirubahar@nakk…

சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னையை வலியுறுத்தி் அனைவரும் பொது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியதின் அவசியத்தையும், வீடுகளையும் வீதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்து மாநகராட்சி பள்ளி மாணவ தூதுவர்கள் பங்கேற்கும் பிரச்சார காணொளியை வெளியிட்டு , மழைக்கால சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளது சென்னை மாநகராட்சி !

ADVERTISEMENT

ADVERTISEMENT

தலைநகர் சென்னையில் பொது மக்களிடையே சுத்தம் , சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னையை வலியுறுத்தி, மாணவ மாணவிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். சின் அறிவுரைப்படி கடந்த மாதம் மாணவ சுகாதாரத் தூதர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மாணவ சுகாதார தூதர்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் தூய்மை மற்றும் சுகாதாரம் பற்றிய பிரச்சாரத்தை, குறிப்பாக டெங்கு ,தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுகொண்டார். இதன்தொடர்ச்சியாக காணொளி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்குகொள்ள மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்ட மாணவ சுகாதாரத் தூதர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு வீடியோவை சென்னை மாநகராட்சி தயாரித்து வெளியிட்டுள்ளது.


சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்கிற முழக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் வீடுகளையும் வீதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய சுயபொறுப்புணர்வை பொதுமக்களுக்கு வலியுறுத்தி டெங்கு கொசுக்களை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ அனைத்து முன்னணி செய்தி தொலைக்காட்சிகள் சென்னையிலுள்ள பிரதான திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோக்கள் மூலமும் மாநகராட்சி மண்டலவாரியாக மழைக்கால நோய்தடுப்பு மற்றும் சுகாதாரமான சென்னையை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மழைக்கால நோய்களை தடுப்போம், டெங்கு கொசுக்களை ஒழிப்போம், பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் தவிர்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், வீடுகளில் கழிவுநீர் மற்றும் தூயநீர் தேங்காமலும் ஒத்துழைப்போம், மழை நீரை சேகரிப்போம் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னையில் உள்ள 15 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 20,000 மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் வீதிக்கு வீதி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவும் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் படிக்கும் பள்ளிகள் அருகே உள்ள வீதிகளுக்கு விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று வீட்டுக்கு வீடு துண்டு பிரசுரங்களை வழங்குவார்கள் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT