ADVERTISEMENT

கதைத் திருட்டு : 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குநர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

04:29 PM Oct 21, 2019 | rajavel

எந்திரன் கதை திருட்டு வழக்கில் நவம்பர் 1 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என இயக்குநர் ஷங்கருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


கடந்த 2010ல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது. அப்போது, 1996 - லேயே ’இனிய உதயம்’ இதழில் நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியரும், கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’ஜூகிபா’ என்ற கதையைத் திருடித்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் சிறுகதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், சாட்சியங்கள் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், இயக்குநர் ஷங்கருக்கு பதிலாக அவர் உதவியாளர் யோகேஷ் என்பவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வருகை தந்தார்.

கதைத் திருட்டுப் புகாருக்கு இயக்குநரான ஷங்கர்தான் பதிலளிக்க முடியும். அவர் கதையை திருடவில்லை என்று மூண்றாவது நபர் சாட்சி சொல்ல சட்டத்தில் இடமில்லை என மனுதாரர் தரப்பு வாதிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எழுத்தாளர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.



அப்போது இந்த வழக்கை எழும்பூர் 2வது நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ததோடு நவம்பர் 1ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் மற்றும் எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவருக்கும் எழும்பூர் பெருநகர் 13வது நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் இயக்குனர் ஷங்கர் கதையைத் திருடிப் படமாக்கினாரா இல்லையா என்பது நிரூபணமாகும். எந்திரன் படம் 2010ம் ஆண்டு வெளியான நிலையில், இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT