ADVERTISEMENT

நின்றுபோன திருமணம்... ஏழு லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மணமகன் புகார்

03:42 PM Jan 22, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது கடம்புலியூர் கிராமம். அங்கு வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் தனது தோழிகளுடன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாட்டு கச்சேரியில் நடனமாடினார். இதனால் கோபமுற்ற மணமகன் மணப்பெண்ணைக் கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு கோபித்துக்கொண்ட மணப்பெண் மணமகனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினார். இதனால் கடந்த 19ஆம் தேதி நடைபெற இருந்த திருமணம் திடீரென நின்று போனது. இதனால் மணமகன் வீட்டார் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு வருகை தந்திருந்த செஞ்சியைச் சேர்ந்த உறவுக்கார வாலிபர் ஒருவரை மணமகனாகத் தேர்ந்தெடுத்து உடனடியாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமகளின் கன்னத்தில் அறைந்த மாப்பிள்ளை, திருமணம் நின்றுபோன கோபத்தில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் திருமண வரவேற்பு விழாவில் நடைபெற்ற பாட்டுக் கச்சேரியின் போது என்னையும் அந்த பெண்ணையும் சேர்ந்து நடனமாடச் சொல்லி வற்புறுத்தினார்கள். அப்போது நடனமாட எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டேன். ஆனால் அந்தப் பெண்ணின் கையை பிடித்து கொண்டு வேறு ஒருவர் நடனம் ஆடினார். இப்படி மற்றவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடலாமா?

இது தவறு என்று சுட்டிக் காட்டியதற்காக அந்தப் பெண்ணும் அவரது உறவினர்களும் என்னை அடித்தார்கள். இதனால் திருமணம் நின்று போனது. நானும் எனது குடும்பத்தினரும் அவமானப்படுத்தப்பட்டு, வேதனை அடைந்தோம். திருமண நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை சுமார் 7 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. தற்போது எனது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எனக்கு நஷ்ட ஈடாக ஏழு லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும். மேலும் என்னை ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT