ADVERTISEMENT

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ; அருணா ஜெகதீசன் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

03:57 PM Aug 24, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பாக துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினர்.

ஸ்னோலின் தாயார் வனிதா பேசுகையில் :

"ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் 14பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையில் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வகையில் 16 பேர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகளை இழந்து தினமும் ரத்த கண்ணீர் வடித்து வருகிறோம். வழக்கறிஞராக வேண்டும் என ஆசையுடன் இருந்த எனது மகளை இழந்துவிட்டோம். இதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்ய வேண்டும்.

தமிழக அரசு, அருணா ஜெகதீசன் அறிக்கையை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எடப்பாடி அரசிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தங்கள் ஆட்சி வந்தால் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி எங்களை நேரில் சந்தித்தார். துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சுட்டுக் கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால் 14 பேரை இழந்தவர்கள் வேதனையுடன் இருக்கிறோம். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த நிதி இதுவரை முறையாக வந்து சேரவில்லை. 14பேர் உயிர் போனதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தின் போது உடலுறுப்புகளை இழந்து இன்றளவும் மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் நபர்களுக்கும் போதிய உதவி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இதனையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய தமிழ் மீனவர் கூட்டமைப்புத் தலைவர் வழக்கறிஞர் ரஜினி பேசுகையில் :

"தமிழக சட்டப்பேரவையில் அருணா ஜெகதீசன் அறிக்கையையும், அறிக்கை மீதான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும், அருணா ஜெகதீசன் அறிக்கை கசிந்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சை தமிழ் மீனவர் கூட்டமைப்பினர் வன்மையாக கண்டிக்கிறது. ஜெயக்குமார் சமூகப் பொறுப்பற்ற தன்மையுடன் பேசிவருகிறார். இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் குழுவிற்கு நன்றி.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது போல சட்டப்பேரவையில் அறிக்கை மற்றும் அறிக்கை மீதான நடவடிக்கை ஆகிய இரண்டையும் சேர்த்துத் தாக்கல் செய்ய வேண்டும். வேதாந்தா நிறுவனத்தை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். துப்பாக்கிச் சூட்டின் போது பயங்கரவாத அமைப்பு புகுந்துள்ளதாக கூறி துப்பாக்கிச் சூட்டிற்கு ஆதரவாகப் பேசி திசை திருப்பிய நடிகர் ரஜினிகாந்தை வன்மையாகக் கண்டிக்கிறோம், ஆனால் அருணா ஜெகதீசன் அறிக்கையில் பயங்கரவாத ஊடுருவல் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார், எனவே துப்பாக்கிச் சூடு கொலைக்கு ஆதரவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT