ADVERTISEMENT

பிணம் தின்னும் கழுகுகள் போல எல்லாவற்றிலும் ’கமிஷன்’ பார்க்கும் எடப்பாடி அரசு - ஸ்டாலின்

12:22 AM Jun 26, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு விற்பதா?- என்று எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் - கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

ADVERTISEMENT

’’சிறந்த சுவையுள்ள சிறுவாணித் தண்ணீரை அருந்தும் நல்ல வாய்ப்பு கோயம்புத்தூர் மாநகர மக்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. தற்போது கோவை மாநகரக் குடிநீர் வழங்கலை நிறைவு செய்யும் பொறுப்பை பன்னாட்டுத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திடவும், அடிப்படைத் தேவைகளில் அதிமுக்கியமான குடிநீரைத் தனியாருக்குத் தாரைவார்த்து அவர்கள் இலாபம் ஈட்டிட வழி ஏற்படுத்திக் கொடுக்கவும், குடிநீர் வழங்கலை வணிகமயமாக்கிடவுமான வெகுமக்கள் விரோதத் திட்டம் செயல்படவிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

​பிரான்ஸ் நாட்டின் சுயஸ் என்ற நிறுவனத்திற்கு கோவைக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை, கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3 ஆயிரத்து 150 கோடிக்கு, தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசு தாராளமாக வழங்கியிருக்கிறது. இதனை அந்த பிரான்ஸ் நாட்டின் சுயஸ் நிறுவனம் பெருமையுடன் தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

டெல்லி மாநிலத்தின் மாளவியா மாவட்டத்தைத் தொடர்ந்து, குடிநீர் வழங்கிட, இந்தியாவில் இரண்டாவது பெரிய உரிமத்தைப் பெற்றிருக்கிறோம் என்று அந்த தனியார் நிறுவனம் மார் தட்டிக்கொள்கிறது. இனி எதிர்காலத்தில், கோவை மாநகர மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்கு இந்தத் தனியார் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, அதன் தயவை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் அபாயம் உள்ளது.

இதற்கு முன், பொலிவியா நாட்டில் கொச்சபம்பா நகரில் செமப்பா என்ற தனியார் நிறுவனத்திடமும் அதன்பிறகு இந்த சுயஸ் நிறுவனத்திடமும் குடிநீர் வழங்கிட உரிமம் வழங்கப்பட்டபோது, கட்டணம் செலுத்தினால் மட்டுமே குடிநீருக்கான அட்டை வழங்கப்பட்டு, அதனை இயந்திரத்தில் செருகினால்தான் தண்ணீர் பெற முடியும் என்ற சிக்கலான நிலை உருவானது.

காசு இல்லாதவர்களுக்கு தாகம் தீர்த்துக் கொள்ள சொட்டுத் தண்ணீர்கூட கிடையாது என்ற நிலைமையும் ஏற்பட்டது என்கிறார்கள் சர்வதேச அளவிலான இயற்கை ஆர்வலர்கள்.

​ அதுமட்டுமின்றி, ஆற்று நீர், ஆழ்குழாய் மூலம் எடுக்கப்படும் நீர் இவற்றைக்கூட பயன்படுத்துவதற்கு சுயஸ் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நெருக்கடி உருவானது. மழை நீரை பயன்படுத்தக்கூட கெடுபிடிகள் காட்டப்பட்டதால், மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் வெடித்து, பொலிவியா நாட்டைவிட்டு சுயஸ் நிறுவனம் விரட்டப்பட்ட நிகழ்வையும், அந்த நிறுவனத்தின் மிக மோசமான பின்னணியை அறிந்த இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

​ தரமற்ற அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு, அ.தி.மு.க. அரசு கோவை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் உரிமத்தை மாநகரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு விற்றிருக்கிறது.

குடிநீர் உரிமம் பெற்றுள்ளதை அந்த நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து மக்கள் விரோத அ.தி.மு.க. அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

​மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை. அதனால்தான், தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, ஃபுளூரைடு பாதிப்பிற்குள்ளான தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக, ஜப்பான் நாட்டுக்கு நேரில் சென்று அவர்களின் நிதியுதவியைப் பெற்று, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்தி, பாதுகாப்பான குடிநீர் கிடைக்கச் செய்தோம்.

​அதுபோலவே, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு போர்க்கால அடிப்படையில் மிகவேகமாகச் செயல்படுத்தியது. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கிருஷ்ணா நதி நீரை விரைந்து பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் தி.மு.கழக அரசும், அன்றைய சென்னை மாநகரின் மேயராக இருந்த முறையில் நானும் தொடர்ந்து ஈடுபட்டதன் காரணமாக, அந்தத் திட்டங்கள் நிறைவேறின.

​மக்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காத அ.தி.மு.க. அரசு, கோவை மாநகரத்தில் உள்ள ஏறத்தாழ 17 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவைக்கான உரிமத்தை, மோசமான முன்னுதாரணங்கள் படைத்த ஒரு தனியார் நிறுவனத்திடம் அளித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, கோவை மக்களுக்கு இந்த அரசு செய்யும் துரோகமாகும். பிணம் தின்னும் கழுகுகள் போல எல்லாவற்றிலும் "கமிஷன்" பார்க்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, மக்களின் அடிப்படை உரிமையான குடிநீரிலும் சுயலாபம் சுருட்டக் கருதிச் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT