ADVERTISEMENT

எனது 8 ஆண்டு வலியுறுத்தலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்- ஸ்டாலின் பேச்சு...

04:49 PM Sep 23, 2019 | kirubahar@nakk…

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "என்னுடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை இன்று பல இடங்களுக்கு நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகின்ற காரணத்தால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டுமுதல் கேள்வி நேரத்திலும், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போதும், அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றேன். அப்போதெல்லாம் பதிலளித்த, மின்துறை அமைச்சர் அவர்கள், பல விளக்கங்களைத் தந்திருக்கிறார். குறிப்பாக, 2,657 கோடி ரூபாய் மத்திய அரசின் மூலமாக இந்தத் திட்டத்திற்கு, மின் கம்பிகள் அனைத்தையும் HT மற்றும் LT, புதைவடக் கம்பிகளாக மாற்ற இருக்கிறோம் என்று உறுதி சொல்லப்பட்டது. தொடர்ந்து 7 முறை சட்டமன்றத்தில் இதுகுறித்து நினைவுபடுத்திப் பேசியிருக்கிறேன். அதன்விளைவாக, சில பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், அந்தப் பணிகள் போகின்ற போக்கைப் பார்த்தால், 2021 மார்ச் மாதம்தான் முடிவடையும் என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே, உயிர்ப்பலி ஏற்படுவதைத் தடுக்க, உடனடியாகவும், விரைவாகவும் இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமூச்சோடு ஈடுபட்டு முடித்துத்தர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல கணேஷ் நகர் பகுதியில் சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் கேட்டு, நான் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறேன். எனவே, அந்தப் பணிகள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து, கொளத்தூர் - வில்லிவாக்கம் தொகுதிகளை இணைக்கும் LC1 பணிகளை ரயில்வே துறை முடித்திருக்கும் நிலையில், மாநகராட்சி விரைந்து அந்தப் பணிகளை முடித்து, 8 ஆண்டுகளாக நான் கொடுத்துவரும் வலியுறுத்தல்களுக்கு இந்த அரசு விரைவில் செவி சாய்த்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT