ADVERTISEMENT

108 வயது மூதாட்டியை ஏமாற்றி பறித்த சொத்தை மீட்டுக் கொடுத்த எஸ்.பி...

03:36 PM Nov 02, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு வயது 108. இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். சில தினங்களுக்கு முன் கிருஷ்ணவேணி தனது மகன் கணேசன் தன்னிடமிருந்த சொத்தை தனக்கு தெரியாமல் பறித்துக்கொண்டதோடு தன்னை பராமரிக்கவுமில்லை என்று 108 வயது கிருஷ்ணவேணி, மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT


அதில் வயதான காலத்தில் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகிறேன். மீதமுள்ள நாட்களை எனது மூன்று மகள்களோடு கழிக்க விரும்புகிறேன். எனது மகன் என்னை கவனித்துக் கொள்ளமாட்டார். எனவே என் வீட்டை என் 3 மகள்களுக்கும் பிரித்துக் கொடுப்பதற்காக எண்ணியிருந்தேன். அந்த வீட்டையும் எனக்கு தெரியாமலேயே என் மகன் கணேசன் அவரது பெயருக்குமாற்றிக் கொண்டு ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே என் வீட்டை எனக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும். அது என் மகளுக்கு சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி ராதாகிருஷ்ணனிடம் கிருஷ்ணவேணி தன் மகள்களுடன் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.


இதையடுத்து எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சிறுவந்தாடு கிராமத்திற்கு சென்று கணேசனிடம் விசாரித்து மூதாட்டி கிருஷ்ணவேணிக்கு சொந்தமான வீட்டை அவரவருக்கு உரிய பாகத்தை பிரித்து மூன்று மகள்களுக்கும் பெற்றுத் தந்துள்ளார். மேலும் அதற்கான பத்திரத்தையும் மூதாட்டி கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்துள்ளார். அதைபெற்றுக் கொண்ட கிருஷ்ணவேணி எஸ்.பிக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளார். இதில் ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சின்னராஜ் நல்லசிவம், இன்ஸ்பெக்டர் மரிய ஜோசப், மஞ்சுளா, ரத்தினசபாபதி ஆகியோர் உடனிருந்தனர். 108 வயது மூதாட்டி தனது இறுதிக்காலத்தில் சாப்பாட்டுக்கு சிரமப்படாமல் மன நிம்மதியோடு வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவரிடமிருந்து அவரது மகனால் ஏமாற்றப்பட்ட சொத்தை முறைப்படி திரும்ப பெற்றுக் கொடுத்துள்ளார் எஸ்.பி ராதாகிருஷ்ணன்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT