ADVERTISEMENT

’எடப்பாடியின் பேச்சைக் கேட்டால் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது’ - பாமக பாலு

06:28 PM Jul 31, 2018 | Anonymous (not verified)


சமூக நீதி பேரவை மாநிலத் தலைவர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

வன்னியர்கள் மீது திடீர்ப் பாசம் வந்து விட்டதைப் போல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாடகமாடிக் கொண்டிருக்கிறார். வன்னிய மக்கள் நலனுக்காக தமது அரசு தான் ஏராளமான நன்மைகளை செய்திருப்பதாகவும், வன்னிய மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி எதுவுமே செய்யவில்லை என்றும் சேலத்தில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பேசும் போது கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சைக் கேட்டால் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.

வன்னியர்களின் நலனுக்காக பாட்டாளி மக்கள் கட்சியும், மருத்துவர் ராமதாஸ் அவர்களும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதுபற்றியெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி பேசத் தேவையில்லை.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதால், அதை அந்த ஆடு நம்பினால், அன்று அந்த ஓநாய்க்கு ஆடு விருந்தாகப் போகிறது. ஓநாய்களிடம் எம்மக்கள் விழிப்புடன் தான் இருக்கிறார்கள்... இருப்பார்கள். வன்னியர்களுக்காக கண்ணீர் விடும் எடப்பாடி பழனிச்சாமி வன்னியர்களுக்கு அப்படி என்ன தான் செய்து விட்டார்?

வன்னியர் சமுதாயத் தலைவர்களில் ஒருவரான ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்; அவருக்கு கடலூரில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தது தான் வன்னியர் சமுதாயத்துக்கு பினாமி அரசு செய்த நன்மையாம். ராமசாமி படையாச்சியார் வன்னியர் சமுதாயத்தின் மரியாதைக்குரியத் தலைவர்; அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.


ஆனால், இந்த ஒரு செயலை செய்வதன் மூலம் வன்னியர்களின் அனைத்துத் தேவைகளும் நிறைவேறி விடுமா? இந்த ஒரு செயலை மட்டும் தான் வன்னியர்கள் எதிர்பார்த்தார்களா?

* வன்னியர்களின் முக்கியக் கோரிக்கை அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான். அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவர் அய்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 69% இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றமும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. அதை மதித்து தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க பினாமி அரசு தயாரா?

* முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் நிலை என்ன? வன்னியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் எந்த விதமான முக்கியப் பதவிகளிலும் வன்னியர்கள் இருக்கக்கூடாது என்று கூறி அவர்களை பழிவாங்கி வருகிறாரே? இது தான் வன்னியர்களுக்கு செய்யும் நன்மையா?

* வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சட்டக்கல்லூரி தொடங்குவதற்கான அனுமதியை கடந்த 11 ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடித்ததும், சென்னை உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் அனுமதி தராமல் உச்சநீதிமன்றம் வரை சென்றது தான் வன்னியர்களுக்கு செய்த நன்மையா?

* தமிழக அரசில் உள்ள துறை செயலாளர் பதவிகளின் எண்ணிக்கை - 53. இந்த பதவிகளில் உள்ள வன்னியர்களின் எண்ணிக்கை - 0

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மொத்தமுள்ள உறுப்பினர் பதவிகள்- 15. அவற்றில் வன்னியர்களின் எண்ணிக்கை - 0

* தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எண்ணிக்கை- 21. அவற்றில் வன்னியர்களின் எண்ணிக்கை - 0.

* தமிழக காவல்துறையில் உள்ள ஐ.ஜிக்கள் எண்ணிக்கை - 43 . அவற்றில் வன்னியர்களின் எண்ணிக்கை - 0

* தமிழக காவல்துறையில் உள்ள கூடுதல் டி.ஜி.பிக்கள் எண்ணிக்கை - 24. அவற்றில் வன்னியர்களின் எண்ணிக்கை -0

* தமிழக காவல்துறையில் உள்ள டி.ஜி.பிக்கள் எண்ணிக்கை - 06. அவற்றில் வன்னியர்களின் எண்ணிக்கை -01

* தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுனர் தான் வேந்தர். மீதமுள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். ஆனால், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த புஷ்பவனம் குப்புசாமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது, அதை ஏற்க மறுத்தவர் இதே எடப்பாடி பழனிச்சாமி தான். அவருக்கு பதிலாக கேரளத்தைச் சேர்ந்த பெண்மணியைச் சேர்ந்தவரை நியமித்தவரும் இதே எடப்பாடி பழனிச்சாமி தான். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட துணைவேந்தராக வந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு துரோகங்களை செய்த எடப்பாடி தான் வன்னியர்களுக்கு நன்மை செய்வதாகக் கூறியிருக்கிறார்.

* 2013&ஆம் ஆண்டு எந்த குற்றமும் செய்யாத நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு ஆகியோரை இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்ததே. குருவை 4 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்ததே. அப்பாவி வன்னியர்கள் 12 ஆயிரம் பேரை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததே. இவை தான் வன்னியர்களுக்கு அதிமுக அரசு செய்த நன்மைகளா?

* வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 135 பேரை குண்டர்கள் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தியதே ஜெயலலிதா அரசு. இது தான் வன்னியர்களுக்கு செய்த நன்மையா?

இராமசாமி படையாச்சியாருக்கு சிலை வைப்பது தொடங்கி வன்னியர் சொத்து அறக்கட்டளைத் தொடங்குவதாக அறிவிப்பது வரை அதிமுக அரசின் அனைத்து நாடகங்களுக்கும் பின்னணியில் இருப்பது மருத்துவர் ராமதாஸ் மீதான பயம் தான். மருத்துவர் அய்யாவின் கண்ணசைவு தான் எங்களுக்கு கட்டளை. எங்களின் அங்கீகாரம் அய்யா தான். எங்களுக்கு அனைத்தும் அய்யா தான்.

மருத்துவர் அய்யா கான மயில். எடப்பாடி பழனிச்சாமி வான்கோழி. கான மயில் செய்வதையெல்லாம் வான்கோழிகள் செய்ய நினைத்தால் என்னவாகும் என்பது விரைவிலேயே தெரியும். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT