ADVERTISEMENT

ஜமீன்தார்களில் கடைசி ஜமீன்... சிங்கம்பட்டி ஜமீன்தார் உடல் தகனம் செய்யப்பட்டது!

05:36 PM May 25, 2020 | kalaimohan


இந்திய மண்ணில் காலடி பதித்த வியாபாரிகளான வெள்ளை ஏகாதிபத்தியம் இந்திய வளங்களை சூறையாடவும், தேசத்தை கைப்பற்றவும் வெடிகுண்டுப் போர் முறையைப் பயன்படுத்தி முதன் முதலில் பாளையங்களை ஒழித்தது. பின்னர் அவர்கள் வசமிருந்த நிலம் மற்றும் நீச்சுக்களை பராமரிக்கவும் வரி வசூல் செய்யவும் தங்களுக்கு இணக்கமானவர்களை நியமித்து அந்த முறையை ஜமீன்தாரி எனப்படும் ஜமீன்தார்களாக்கினார். இந்த ஜமீன்தார்கள் அந்த ஏரியாக்களின் முக்கியப் புள்ளிகள். ஒவ்வொரு ஜமீன்தார்களுக்கும் வெள்ளை ஏகாதிபத்தியம் அவரவர்களின் திறமைக்கேற்ப ஆயிரக்கணக்கான ஏக்கர்களைக் கொண்ட கிராமங்களை கொடுத்தனர். அதனை நிர்வாகம் செய்யும் ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் அரசுக்குக் குறிப்பிட்ட வரியினை செலுத்தி வந்தனர். அவைபோக வசூலாகும் மீதமுள்ள வரிப் பணத்தில் ஜமீனை பராமரிக்க பயன்படுத்திக் கொள்ளவேண்டியது வழக்கமாயிற்று.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இது போன்ற ஜமீன்தார்கள் பலர் தங்களின் ஆளுகை காலத்தில் ஜமீன் மக்களின் நலனையும், வளர்ச்சியையும் குறித்தே தங்களின் செயல்பாடுகளை வைத்துக் கொண்டனர். இதன் வழியே பல ஜமீன்தார்கள் வரலாற்றிலும் இடம் பிடித்தனர்.

இதுபோன்று நெல்லை மாவட்டத்தில் மட்டும் 18க்கும் மேற்பட்ட ஜமீன்தார்கள் கோலோச்சியிருந்தார்கள். இதில் மாவட்டத்தின் அம்பையை ஒட்டிய சிங்கம்பட்டி ஜமீன்தாரும் ஒருவர். இவர்களின் கடைசி வாரிசு 88 வயதான டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி.


நாடு சுதந்திரமடைந்த பிறகும் ஜமீன்தார் முறைகள் நடைமுறையில்தானிருந்தன. இந்திரா காந்தி பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஜமீன்தாரி முறைகளை ஒழித்தவர் அவர்களின் ஆளுமையிலிருந்த நிலங்களை அரசுடமையாக்கினார். ஜமீன்தார்களின் வாழ்வாதாரம் பொருட்டு அவர்களுக்கு மானியமும் வழங்க ஏற்பாடுகளை செய்தார்.


இதில் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சுமார் முப்பதாயிரம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஊட்டிக்கு இணையான குளிரைக் கொண்ட பத்தாயிரம் ஏக்கர்களைக் கொண்ட மாஞ்சோலை எஸ்டேட் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு முண்டந்துறைப் பகுதிகள் அடக்கம். ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி, இலங்கையின் கண்டி நகரில் பயின்றவர். கல்வியில் தேர்ச்சி பெற்ற முருகதாஸ் தீர்த்தபதி, ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்டவர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்மீகச் சொற்பொழிவும் நடத்தியிருக்கிறார்கள்.


தனது நிர்வாகத்திற்குட்பட்ட மலைமீதுள்ள முண்டந்துறையின் வனப்பகுதியின் தாமிரபரணிக் கரையோரமிருக்கும் பல சிறப்புகளைக் கொண்ட சொரிமுத்தைய்யனார் ஆலயத்தை விரிவுபடுத்தி ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டார். அந்த ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் உரிமையும் கிடைக்கப் பெற்றவர் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி. மேலும் அவரது நிர்வாகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைமீதிருக்கும் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள மாஞ்சோலை எஸ்டேட்டை, மும்பையின் தேயிலை கம்பெனியான பி.பி.டி.சி. எனப்படும் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனிக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கினார். பின்னர் அந்த நிர்வாகம் அங்கு தேயிலை பயிரிடத் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் ஜமீனுக்குட்பட்ட விவசாய நிலங்களை ஏழை விவசாய மக்களுக்கு சொற்ப அளவிலான தொகையின் அடிப்படையில் குத்தகைக்குக் கொடுத்து வேளாண் உற்பத்தியை தொடங்கி வைத்தவர் முருகதாஸ் தீர்த்தபதி.

ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி காலத்தில், அவர் தன் கல்வியறிவை கொண்டு விவசாய உற்பத்தியை பெருக்கி ஜமீனையும், ஜமீன் மக்களையும் வளம் பெறச் செய்தவர் என்கிறார் சிங்கம்பட்டி ஜமீனில் அடங்கிய மணிமுத்தாறு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சிவன்பாபு.



88 வயதுடைய ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி அண்மை நாட்களாக உடல் நலம்குன்றி அரண்மனையில் சிகிச்சையிலிருந்தார். நேற்றிரவு சுமார் 9 மணிக்கு காலமானார்.

செல்வாக்குமிக்க ஜமீன்தார் உடலுக்கு உறவினர்கள், ஊர் மக்கள், அரசியல் பிரமுகர்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பிடும்படியான ஜமீன்தார்களின் முடி சூட்டப்பட்ட கடைசி ஜமீன்தாரான சிங்கம்பட்டி ஜமீன் காலமான நிலையில் தாமிரபரணி ஆற்றின் நதிக்கரையில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT