ADVERTISEMENT

"தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்" - அமைச்சர் சேகர்பாபு

04:49 PM Jan 20, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவிற்கான திருப்பணிகள் கோவில் நிர்வாகத்தால் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பழனி கோவிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். படிப்பாதை வழியாக மலையேறிச் சென்று அமைச்சர் சேகர்பாபு படிப்பாதையில் உள்ள கோயில்களில் செய்யப்பட்டுள்ள குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மலை மீது அமைந்துள்ள ராஜகோபுரம் மற்றும் தங்ககோபுரம் திருப்பணிகளையும், குடமுழுக்கு ஏற்பாடுகளையும் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், குடமுழுக்கு விழாவிற்காக மலை மீது அமைக்கப்பட்டுள்ள யாகசாலைகள் மற்றும் பக்தர்களின் தரிசனத்திற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, "பழனி மலையடிவாரத்தில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தைப் பார்ப்பதற்காக எல்.இ.டி திரைகள் 16 இடங்களில் பொருத்தப்பட உள்ளது. கும்பாபிஷேகம் அன்று ஹெலிகாப்டர் மூலம் கலசத்திற்கு மலர் தூவப்பட உள்ளது. குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு தமிழில் மந்திரங்கள் ஓதப்படும். மேலும், பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பலரும் ஆர்வமாக உள்ளதாகவும், விழாவில் கலந்துகொள்ள 47000 பேர் இதுவரை இணையவழியில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த நபர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 3000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்" என்று கூறினார்.

இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், கோயில் இணை ஆணையர் நடராஜன் உட்பட அறங்காவலர் குழுவினரும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT