ADVERTISEMENT

சர்வதேச மதிப்பில் பல இலட்சம் விலையுடைய கடத்தல் போதைப் பொருட்கள் பறிமுதல்..!  

10:47 AM Jul 12, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT


வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவையும், அதைக் கடத்திய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகையை அடுத்துள்ள வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் நடக்கப்போவதாக கீழையூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்தத் தகவலைத் தொடர்ந்து வேளாங்கண்ணி முதல் விழுந்தமாவடி வரை கடற்கரையோரமாக உள்ள சவுக்கு மரக்காட்டில் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில், விழுந்தமாவடி அருகே உள்ள காட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அதில் 126 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தன. அதனைப் பறிமுதல் செய்த கீழையூர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில், செருதூர் மற்றும் வேட்டைக்காரனிருப்பைச் சேர்ந்த வீரமுரசு, கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

“கஞ்சாவின் மதிப்பு சர்வதேச அளவில் 10 லட்சம் ரூபாய். இதனை வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த திட்டமிட்டு பதுக்கிவைத்திருந்தனர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போதை நுண்ணறிவு பிரிவு போலீசார் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT