
நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடத்தல் நடப்பது வாடிக்கையாக இருந்தாலும், துறைமுகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப் போவதாக தனிப்படை போலீசாருக்கு மற்றொரு கடத்தல் கும்பல்கள் மூலம் தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து நாகை கடற்கரை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக சிலர் சுவாமி படங்களைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு அதை விற்பனை செய்வதுபோல சென்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து வந்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்துள்ளது. இதில் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடமிருந்த சுவாமி படங்களை சோதனை செய்தனர். அந்த சாமி படங்களின் உள்ளே கஞ்சா இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர்களிடம் இருந்த 90 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினர்.

பிடிபட்டவர்கள் அத்துனை பேரும் நாகை பாப்பாகோவில் அந்தணப்பேட்டை ஆழியூர், சிக்கல், புதுப்பள்ளி, விழுந்தமாவடி, கீச்சாங்குப்பம், டி.ஆர்.பட்டினம், காரைக்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வீரக்குமார், நிவாஸ், ஜெகபர்சாதிக், தியாகராஜன், சத்தியகீர்த்தி, குமார், முகேஷ், அருண் உள்ளிட்ட 8 பேர் என்பதும், கஞ்சாவை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 8 பேரையும் கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களை நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கஞ்சா கடத்திய குற்றத்திற்காக 8 பேரும் 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார், அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.