ADVERTISEMENT

"‘ஜெய் பீம்’ சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஞானவேல்" - சீமான்

09:28 AM Nov 22, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார்கள். இந்நிலையில், ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், பாமக தரப்பு ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப் பலரும் அறிக்கை வெளியிட்டுவந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் நேற்று (21.11.2021) விளக்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே நடிகர் சூர்யா இதில் நடித்தார். காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகும் இதில் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என நம்பினேன். குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அந்த காலண்டரை காட்டுவது எங்களின் நோக்கம் அல்ல. சில வினாடிகள் மட்டுமே வரும் அந்த காலண்டர் சூட்டிங்கின்போது எங்கள் கவனத்தில் பதியவில்லை. ‘ஜெய் பீம்’ பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது. இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயம் இது. தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. இதன்பொருட்டு மனவருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்ற தெரிவித்திருந்தார்.

இவரின் விளக்கம் தொடர்பாக தற்போது இயக்குநரும், அரசியல் கட்சித் தலைவருமான சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், " ‘ஜெய் பீம்’ தொடர்பாக தம்பி ஞானவேலின் கடிதம் கண்டேன். தாமதமாக வந்தாலும் மிகச் சரியாக தனது தரப்பு விளக்கத்தை அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமூக பதற்றத்தையும், சச்சரவையும் தணிக்கும் விதமாக சமூக பொறுப்புணர்வோடும், மிகுந்த முதிர்ச்சியோடும் அணுகிய இம் முறை வரவேற்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT