ADVERTISEMENT

இரண்டாவது நாளாக மீட்பு பணி; ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்

07:16 AM Dec 19, 2023 | kalaimohan

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் விமானம் தூத்துக்குடி விமான நிலையத்திற்குள் தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து உணவுப் பொருட்களை பிரித்து ஹெலிகாப்டர் மூலம் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயிலில் உள்ள 500 பயணிகளுக்கு உணவு வழங்க மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் தற்பொழுது புறப்பட்டுள்ளது. இரண்டு டன் உணவு, தண்ணீருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரணம் வழங்கி வருகிறது. தூத்துக்குடி நகர எல்லையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குமரி மாவட்டத்தில் இன்று மழை இல்லை. குமரிமுனை, தோவாளை சுற்றுவட்டாரத்தில் அதிகாலையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல் மழை பொழிந்து வருகிறது. தூத்துக்குடி வல்லநாட்டில் இரவு நேரத்தில் படகு மூலம் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT