ADVERTISEMENT

27 ஆண்டுகளாக மறந்த சீமான்! பள்ளியை சீர் செய்த திமுக பிரமுகர்! 

06:13 PM Jun 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் படித்த பள்ளியை, 27 ஆண்டுகளுக்கு பிறகு, சீர்செய்த திமுக பிரமுகரின் செயல் பலதரப்பிலும் பாராட்டைப் பெற்றுவருகிறது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது அரணையூர். இந்த கிராமத்தில், சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 70 ஆண்டு காலமாக, ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளி, கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை பயின்றுள்ளார். மேலும், இப்பள்ளியில் பயின்றவர்கள் பலரும், உயர் அரசு பதவிகளை வகித்துவருகின்றனர். ஆனால், யாரும் இந்தப் பள்ளியை சீர்செய்ய முன்வராததால், அப்பகுதி மக்கள் வேதனையில் இருந்துவந்தனர்.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற ஊராட்சி மன்றத் தலைவி முனிஸ்வரி கணேசன், கிராம மக்களை அழைத்து, கிராமத்தில் பூட்டிக்கிடக்கும் பள்ளியை மீண்டும் திறக்க, பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் விளைவாக, கிராம மக்களின் ஒத்துழைப்போடு, பள்ளியை மீண்டும் திறப்பதற்காக குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை சந்தித்து மீண்டும் பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால், 27 ஆண்டு காலமாக, பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கு, அரசு நிதிவழங்க இயலாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனால் ஏமாற்றமடைந்த கிராம மக்கள் ஒன்றுகூடி, தங்களது நிதியிலேயே பள்ளியை சீர்செய்ய முடிவெடுத்தனர். அதனடிப்படையில், சுமார் 2 லட்சம் ரூபாய் வசூல்செய்து, பள்ளிக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு காத்திருந்த சோதனை, மாணவர் சேர்க்கை. பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கும்போது, அரசுப் பள்ளியில் ஆள் சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும், மனம்தளராத ஊராட்சி மன்றத் தலைவர் முனிஸ்வரி கணேசன், சுற்றியுள்ள கிராமத்து பெற்றோர்களை சந்தித்து, மாணவர்களை மீண்டும் அரசு பள்ளியில் சேர்க்குமாறு வேண்டுகோள் வைத்தார். தற்போது 39 மாணவர்களுடன், பள்ளி மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்கிவருகிறது. மேலும், மாணவர்களுக்கு கிராம மக்கள் சார்பாக, மதிய உணவு ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியை தொடர்ந்து நடத்த தேவையான கழிவறை, சுற்றுச்சுவர் மற்றும் மதிய உணவு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது இக்கிராம மக்களின் வேண்டுகோளாக உள்ளது.


நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் பல அரசு அதிகாரிகளை கொடுத்த கிராமத்துப் பள்ளி இன்று மீண்டும் புன்னகையுடன் மாணவர்களை ஆரத் தழுவிக் கொள்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT