ADVERTISEMENT

பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம்! 

10:07 PM Jul 23, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6- ஆம் வகுப்பிலிருந்து படித்து வந்துள்ளார். தற்போது 12- ஆம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த ஜூலை 13- ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 14- ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதை வீடியோ பதிவும் செய்யப்பட்டது. அதன் ஆய்வு அறிக்கையில் மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்தது.

இதனால் மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்கள் பெற்றோர்கள் இடத்தில் எழுந்தது. அதையடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற்கூராய்வு மற்றும் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி மனு தொடுத்தனர். இதற்கிடையில் கடந்த ஜூலை 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவி மரணத்திற்கு நீதிக் கேட்டு நடைபெற்ற போராட்டம் மாபெரும் கலவரமாக மாறியது.

50- க்கும் மேற்பட்ட பள்ளிப் பேருந்துகள், வாகனங்கள் உள்ளிட்டவை எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. அதேசமயம், பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18- ஆம் தேதி அன்று பள்ளி மாணவியின் உடலை மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிட்டது. மேலும் அதற்கான சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு, ஜூலை 19- ஆம் செவ்வாய்க்கிழமை அன்று மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது.

இதனிடையே மாணவியின் மறு உடற்கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரைச் சேர்க்க வலியுறுத்திய பெற்றோர் தரப்பினர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் நேற்று (22/07/2022) பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மாணவி உயிரிழந்து 11 நாள் கடந்து இன்று (23/07/2022) காலை 07.00 மணிக்கு மாணவியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து அவரது பெற்றோர் வாங்கிக் கொண்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மாணவியின் சொந்த கிராமமான பெரியநெசலூருக்கு சடலம் கொண்டு வரப்பட்டது. எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி தேன்மொழி தலைமையில் சுமார் 700- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அக்கிராமத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டு வாகனம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா ஆகிய வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

கடுமையான பரிசோதனைக்கு பிறகே வாகனங்களை கிராமத்திற்குள் காவல்துறையினர் அனுமதித்தனர். வெளியூர் ஆட்கள், பிற இயக்கம் மற்றும் அமைப்பினருக்கு கிராமத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் சரியாக, காலை 11.00 மணியளவில் மாணவி ஸ்ரீமதிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.

இறுதிச்சடங்கில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் குமரகுரு உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தியதுடன், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு இடுகாடு வரை ஊர்வலமாக வந்தனர். காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் இடுகாட்டில் மாணவியின் உடலுக்கு அவரது பெற்றோர்கள் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்த பின்பு மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT