school student incident youth rasipuram police arrested

Advertisment

நாமக்கல் அருகே, பேஸ்புக் மூலம் நட்பாகப் பழகிய பள்ளி மாணவியை ஆபாசப் படம் எடுத்து, அதைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24) பேஸ்புக் மூலம் அறிமுகமானார்.

தமிழ்ச்செல்வன் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது நட்பை ஃபேஸ்புக்கில் வளர்த்து வந்துள்ளனர். மேலும், வாட்ஸ்ஆப் மூலமும் பேசி வந்துள்ளனர். இதனால் நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

Advertisment

பின்னர் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து வந்தனர். அப்போது மாணவியை தமிழ்ச்செல்வன் ஆபாசமாகப் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த நிலையில், அந்த மாணவியைத் தனது ஆசைக்கு இணங்குமாறு அடிக்கடி தமிழ்ச்செல்வன் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ்ச்செல்வன் வற்புறுத்தி வந்ததால், இதுகுறித்து மாணவி தாயிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், இதுகுறித்து தமிழ்ச்செல்வனிடம் கேட்டார். அப்போது தனது ஆசைக்கு இணங்காவிட்டால் மாணவியின் ஆபாசப் படங்களை இணையதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாய் வெள்ளிக்கிழமை (பிப். 5) ராசிபுரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைந்து சென்று தமிழ்ச்செல்வனை கைது செய்து ராசிபுரம் காவல்நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து மாணவியின் ஆபாசப் படங்களைப் பறிமுதல் செய்தனர்.

பின்னர், தமிழ்ச்செல்வன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராசிபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர்.