ADVERTISEMENT

தரைமட்டமான புகாரையும் மீறி திறக்கப்பட்ட பள்ளி கட்டடம்!

05:24 PM Nov 18, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (18/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (19/11/2021) காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும். இதனால் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரிக்கும். திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குக் கனமழை நீடிக்கும்.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், நாகை, காஞ்சிபுரம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் ஏரி, குளம், கால்வாய் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் கடந்த சில தினங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் வடலூர் அருகே உள்ள வானதிராயபுரம் என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப தொடக்கப்பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

இந்த கட்டடமானது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த சில தினங்களாக மழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. அதே போல் ஏற்கனவே பள்ளி கட்டடம் உறுதித்தன்மை இல்லை எனப் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். அதையும் மீறி அந்த கட்டிடமானது திறக்கப்பட்டு அங்கு பள்ளி இயங்கி வந்தது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் தரைமட்டமாக இடிந்து விழுந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT