publive-image

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் இராமலிங்க அடிகளாார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. இந்த சத்திய ஞான சபைக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும்உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வள்ளலாரின் சீடர்கள், வள்ளலாரின் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இதனை சர்வதேச மையமாக அமைக்கப்படும் என கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், வடலூர் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் ஆய்வு மேற்கொண்டார். சத்திய ஞான சபையில் உள்ள தர்மசாலை, அணையா அடுப்பு, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகம் ஆகிய இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “வடலூர் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, இதற்காக சர்வதேச அளவில் வரைபடம் கோரப்பட்டுள்ளது. அது வந்தவுடன் தமிழக முதல்வர் தலைமையில் எது சிறந்தது என ஆய்வு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

Advertisment

இந்த ஆய்வின்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்,இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் பரணிதரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வட்டாட்சியர் சையது அபுதாகிர், திமுக குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், சத்திய ஞானசபை செயல் அலுவலர் சரவணன் உள்பட பலரும் உடனிருந்தனர்.