ADVERTISEMENT

மூக்குத்தி தர்றோம்.. மோசடிகள் பலவிதம் அதில் இது ஒருவிதம் 

04:42 PM Sep 27, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை நகரம், வேங்கிக்கால் பகுதியில் ஸ்டார் பவுன்டேஷன் – ஸ்டார் சேவா மையம் செயல்படுகிறது. இந்த மையம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் என்.ஜி.ஓ அமைப்பினரை ஸ்டார் பவுன்டேஷன் மற்றும் ஸ்டார் சேவா மையத்தோடு இணைந்து செயல்படவைத்துள்ளனர். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் வேலை பவுன்டேஷன் சார்பில் இலவச தையல் மிஷின் வழக்குதல், தாலிக்கு தங்கம், இலவச கனிணி பயிற்சி, ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, காது கேளாதவர்களுக்கு இலவச காது கேட்கும் கருவி வழங்குதல், வேளாண்மை அபிவிருத்தி திட்டம், இலவச கறவைமாடு, ஆடு, நாட்டுகோழி வழங்குதல், தவணை கடன் வழங்குவது உள்ளிட்டவற்றை செய்துவருகின்றனர்.

பொதுமக்களை ஸ்டார் பவுன்டேஷனில் உறுப்பினராக முதலில் இணைக்க வேண்டும். அதற்கு ஒருநபரிடம் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஸ்டார் பவுன்டேஷன் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் எந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறார்களோ அதில் இணைய வேண்டும். அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

ரூ. 1 லட்சம் கடன் வேண்டும் என்றால் 10 ஆயிரம் முதலில் டெப்பாசிட் செய்ய வேண்டும். ஆடு வேண்டும் என்றால் 1500 ரூபாய் கட்டினால் இலவசமாக 4 ஆட்டுக்குட்டி தருவார்கள். 1000 ரூபாய் தந்தால் புடவையும், மூக்குத்தியும் தருவார்கள் எனச் சொல்லியுள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக் கணக்கான பெண்கள் பணம் கட்டி சேர்ந்துள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஸ்டார் பவுன்டேஷனின் நிறுவன இயக்குநர்களான இளவரசி, அவரது கணவர் ஜெயராமன் இருவரும் சென்று 50 பேர், 60 பேருக்கு புடவை, மூக்குத்தி தருவது, ஆட்டுக்குட்டி தருவது எனச்செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ஒவ்வொரு மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லட்சம், லட்சமாக பணம் கொண்டு வந்து தந்துள்ளார்கள். மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று பிரமாண்டமாக விழா நடத்தி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனச் சொல்லியுள்ளார்கள்.

அந்த நாளில் விழா நடைபெறவில்லை. பணம் கட்டிய பெண்கள் ஸ்டார் பவுன்டேஷனின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நெருக்கடி தந்துள்ளனர். அவர்கள் திருவண்ணாமலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘மேடத்துக்கு உடம்பு சரியில்லை’ எனச்சொல்லியுள்ளார்கள். அதன்பின் கால் செய்தால் மொபைல் ஃபோன் எடுப்பதில்லையாம். அந்தந்த மாவட்டங்களில் இருந்து நேரடியாக தலைமை அலுவலகமான திருவண்ணாமலை அலுவலகத்துக்கு வந்தபோது அது பூட்டியிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பல கோடி ஏமாந்துவிட்டோம் என புகார் தந்துள்ளார்கள்.

என்.ஜி.ஓ அமைப்பினர் மக்களை, அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், அந்த என்.ஜி.ஓக்களையே ஏமாற்றியுள்ளார் திருவண்ணாமலையில் என்.ஜி.ஓ நடத்தும் ஒருபெண்மணி. இந்த மோசடி தமிழ்நாடு முழுவதும் பெண்களை குறிவைத்து நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான கணவன் – மனைவி இருவரும் சிக்கி முழுமையான விசாரணைக்கு பிறகே மோசடி தொகை எவ்வளவு என்பது தெரியவரும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT