Coroner for police inspector ... 8 people infected in 3 days !!

தமிழகத்தில் தொடர்ந்து, கரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தங்களின் அடிப்படை தேவைகளால் விதிகளை மீறி மக்கள் சென்று வருகின்றனர். ஊரடங்கு நடவடிக்கைகளைக் கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்படிப் பணியில் ஈடுப்பட்டுள்ள காவலர்களும் அடுத்தடுத்து கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர காவல் நிலைய ஆய்வாளருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ச்சியாக பணியில் இருந்த அவருக்குக் கரோனா என்பதால் அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவலர்கள் பலரும் அச்சத்துக்கு ஆளாகினர். தொற்று பிற காவலர்களுக்கு பரவாமல் இருக்க செய்யாறு காவல் நிலையம், கடந்த 3 நாட்களாக மூடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்ற காவலர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

Advertisment

இன்று காலை அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வெளியானது. அதில், அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றும் 4 காவலர்கள் மற்றும் போலீஸ்நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 4 பேருக்கு என மொத்தம் 8 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கரோனா பாதிக்கப்பட்ட காவலர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி மற்றும் காவலர்கள் உட்பட அனைவரின் குடும்பத்தினருக்கும்கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கரோனா பாதிப்பைத் தொடர்ந்து செய்யாறு காவல் நிலையம் தொடர்ந்து மூடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டு காவல்பணி செய்ய ஜூன் 3ஆம் தேதி கரோனா மருந்து கிட் பாக்ஸ் (கையுறை, முகத்துக்கான மாஸ்க், விட்டமின் மாத்திரைகள், கிருமிநாசினி போன்றவை அடங்கியது) திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி வழங்க தொடங்கினார். முதல் கட்டமாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அது வழங்கப்பட்டது.

Advertisment

மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் அது வழங்கப்படவுள்ள நிலையில் அடுத்தடுத்து மாவட்டத்தில் காவலர்கள் தொற்றுக்கு ஆளாகியிருப்பது காவல்துறை அதிகாரிகளைக் கவலையடைய செய்துள்ளது.