ADVERTISEMENT

வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து சத்யபிரதா சாகு விளக்கம்!

03:18 PM Apr 22, 2024 | prabukumar@nak…

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று (21.04.2024) அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

அதாவது, திருவள்ளூர் - 68.59 %, வட சென்னை - 60.11 %, தென் சென்னை - 54.17 %, மத்திய சென்னை - 53.96 %, ஸ்ரீபெரும்புதூர் - 60.25 %, காஞ்சிபுரம் - 71.68 %, அரக்கோணம் -74.19 %, வேலூர் - 73.53 %, கிருஷ்ணகிரி - 71.50, தருமபுரி - 81.20 %, திருவண்ணாமலை - 74.24 %, ஆரணி - 75.26 %, விழுப்புரம் - 76.52 %, கள்ளக்குறிச்சி - 79.21 %, சேலம் - 78.16 %, நாமக்கல் - 78.21 %, ஈரோடு - 70.59 %, திருப்பூர் - 70.62 %, நீலகிரி - 70.95 %, கோயம்புத்தூர் - 64.89 %, பொள்ளாச்சி - 70.41 %, திண்டுக்கல் - 71.14 %, கரூர் - 78.70 %, திருச்சிராப்பள்ளி - 67.51 %, பெரம்பலூர் - 77.43 %, கடலூர் - 72.57 %, சிதம்பரம் - 76.37%, மயிலாடுதுறை - 70.09 %, நாகப்பட்டினம் - 71.94 %, தஞ்சாவூர் - 68.27 %, சிவகங்கை - 64.26 %, மதுரை - 62.04 %, தேனி - 69.84 %,விருதுநகர் - 70.22 %, ராமநாதபுரம் - 68.19 %, தூத்துக்குடி - 66.88 %, தென்காசி - 67.65 %, திருநெல்வேலி - 64.10 % மற்றும் கன்னியாகுமரி - 65.44 % பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார். அதில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் (APP) கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டது. இந்த செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வாக்கு சதவீதத்தை ஒருசிலர் மட்டுமே செயலியில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம். இதனால் சில குளறுபடிகள் ஏற்பட்டன” எனத் தெரிவித்தார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து கடந்த அக்டோபர் மாதமே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது. வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக கேஸ் பை கேஸ் (Case by Case) விசாரணை நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாராவாரம் அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, சரிபார்க்க பல்வேறு வாய்ப்புகள் வாக்களர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாக்காளர் நீண்ட காலமாக அவரது முகவரியில் இல்லாவிட்டால் பட்டியலில் பெயர் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடியாகும். புதிய வாக்காளர் அட்டைதான் தேவையென்று இல்லை” என விளக்கமளித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT