ADVERTISEMENT

(சசிகலா) பினாமி பரிவர்த்தனை நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன!- நகைக்கடை அதிபர் வழக்கில் வருமானவரித்துறை விளக்கம்!

08:21 AM Feb 21, 2020 | santhoshb@nakk…

சசிகலாவின் பினாமி எனக் கூறி, புதுச்சேரி நகைக்கடை அதிபரின் 148 கோடி ரூபாயை முடக்கி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதாக, வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலாவின் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரி உரிமையாளர் நவீன் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 148 கோடி ரூபாய் பணத்தை, சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக்கூறி முடக்கி, வருமான வரித் துறையினர் உத்தரவு பிறப்பித்தனர்.

ADVERTISEMENT

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நவீன் பாலாஜி உள்பட ஐந்து பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ரிசார்ட் ஒன்றை சசிகலா தரப்புக்கு விற்பனை செய்தபோது, மதிப்பு இழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் கரன்சிகளை வழங்கியதாகவும், அந்தப் பணத்தை வருமான வரித் துறை முடக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வருமான வரித் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரிசார்ட் விற்பனை தொடர்பாக, நவீன் பாலாஜியின் குடும்பத்தினருக்கும், சசிகலாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது எனவும், இந்த ரிசார்ட்டின் பங்குகள் சசிகலாவின் பெயருக்கோ, அவரது பிரதிநிதிகளின் பெயருக்கோ மாற்றம் செய்யப்படாததால், பங்குகளின் உண்மை உரிமையாளரை மறைக்கும் வகையில் இந்தப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பரிவர்த்தனை தொடர்பான உண்மை ஆவணங்கள் சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 148 கோடி ரூபாயை முடக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கும் முன், மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்க போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை துணை ஆணையர் திலீப் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் தள்ளிவைத்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT