ADVERTISEMENT

   இளைஞர்கள் கொண்டாடிய தமிழர் பண்பாட்டுத்திருவிழா

06:54 PM Jan 19, 2019 | paramasivam

ADVERTISEMENT

பண்டைக் காலத்தில் சிலம்பம், மல்யுத்தம், மான் கொம்பு போராட்டம் போன்றவைகள் தோன்றியது மனிதர்களுக்கான தற்காப்பு கலைகளே. எதிரிகள் மற்றும் மிருகங்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே தோன்றிய தமிழனின் கலைகள். கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே தோன்றியவைகள் தான். பின்னாளில் அதுவே மறு ஜென்மமெடுத்து சிலம்பாட்டம் பறையாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என்று பண்டைக்கால தமிழரின் வீர விளையாட்டாகவும், ஆட்டக் கலைகளாகவும் மாறின. என்றாலும் அவைகள் பண்டைக்கால தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டுக்கள், நடன நாட்டியக் கலைகள் என்கின்றன இலக்கியங்கள்.

ADVERTISEMENT

நியூட்டனின் விதியைப் போன்று ஒன்றின் தாக்கம் மற்றொன்றில் எதிரொலிக்கும். ஒன்றில்லாமல் மற்றொன்று என்பது கிடையது, எனும் தத்துவத்திற்கேற்ப பறையாட்டமும், தப்பாட்டமும், உருமி மேளங்கள் போன்றவைகளின் பிறப்பிடமே சிலம்பாட்டம் தான் என்கிற கலைஞர்கள், அதன் மூலம் உருப்பெற்றது தான் பல கலைகள். எனினும் ஒவ்வொன்றிலும் தனித்துவமான நளினங்கள் பிரபதிபலிக்கும். மட்டுமல்ல இது போன்ற கலைகளை ஆட்டங்களை மேற்கொள்கிற போது அவர்களின் உடம்பிலுள்ள அழுக்கு நீர் வெளியேறி சுவாசம் சீராகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவைகள் கட்டுக்குள் வருவதோடு இதயம் சீராக இயங்க உடலின் அனைத்து நரம்புகளும் மொத்தமாக இயங்கி துணை நிற்கும். மனித உடலின் அனைத்து பாகங்களும் இந்தக் கலை மூலம் இயக்கம் பெறும் எனவே சர்வரோக நிவாரணியான இந்தக் கலைகளை நமது பாட்டன முப்பாட்டன் போன்றவர்கள் விஷயத்தோடுதான் எந்தத் தலைமுறை மனிதனாலும் அவனுக்குப் பயன்படுகிற வகையில் கண்டு பிடித்திருக்கிறார்கள். என்கிறார்கள் இந்தக் கலைகளைக் கற்றறிந்த விற்பன்னர்கள்.

அப்படிப்பட்ட அரிதிலும் அரிதான இந்த ஆயகலைகள் அறுபத்து நான்கும் மரணித்துப் போகாமல் தமிழர்களின் தைப் பொங்கல் புத்தாண்டின் போது ஊர் மக்களே திரள, அரங்கமேறியிருக்கிறது. இந்தக் கலைகள் நீர்த்துப் போகாலும், மண்ணோடு மண்ணாக செல்லரித்துப் போகாமலிருப்பதற்கு காரணம் ஒரு பக்கம் அதன் கலைஞர்கள் என்றால் மறு பக்கம் துண்டுகோல் தமிழர்கள்.

குறிப்பாக தற்போது விஞ்ஞான தொழில் நுட்பம் முன்னேறி, உலகமே ஒரு கிராமம் அளவுக்குச் சுருங்கிய காலத்தில், பண்டைக்கால தமிழர்களின் விளையாட்டை பண் மாறாமல் இன்றைய இளைய தலைமுறையினர் கொண்டாடுவதுதான் புருவங்களை உயரவைக்கும் விஷயம்.

நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் சங்கை ஐல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மற்றும் பசுமை சங்கரன்கோவில் அமைப்பின் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களின் பங்களிப்போடு நகரின் தை இரவை பண்பாட்டுக் கலை இலக்கிய இரவாக மாற்றி விட்டனர். மேற் குறிப்பிட்ட அனைத்து கலைகளையும் மேடையில் கொண்டு வந்து மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அசையாமல் கலையாமல் திரண்டிருந்த சிறுவர், சிறுமியர் மக்கள் கூட்டத்தை இறுதி, வரை ரசிக்க வைத்திருக்கிறார்கள். தப்பாட்டம் பறையாட்டம் போன்றவைகளைக் கிராமியக் கலைஞர் ஆடி, மக்களை வசப்படுத்த அடுத்து வந்த நகரின் ராமச்சந்திரா, கோமதி அம்பாளின் பள்ளி மாணவிகளின் சிலம்பாட்டம் ஒயிலாட்டம் தாளம் நயம் தப்பாமல் நுணுக்கமாக ஆடிக்காட்டியது வியப்பு மட்டுமல்ல மக்களின் கரவொலியை அள்ளியது.

இவைகளோடு சுருள் வாள் சாட்டை ஆட்டம், பறையாட்டம் போன்றவைகளின் தாளம் தப்பவில்லை. இவற்றோடு நாகர்கோவில் கலைஞர்களால் நடத்தப்பட்ட பொம்மலாட்டம் பேசப்பட்டது. நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக ஆண் பெண் 100 கலைஞர்கள் கொண்ட சிலம்பாட்டம் சிலா வரிசை தப்பாமல் ஆடியது பசித்த கண்களுக்குப் படையல்மட்டுமல்ல, நிகழ்ச்சி முடிந்து திரும்பிய மக்களின் மனங்களில் அதன் தாக்கமிருந்ததைக் காணமுடிந்தது.

இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியர்களோடு நகரைச் சுற்றியுள்ள கிராமங்களின் கிராமியக் கலைஞர்களையும், நாகர்கோவிலிலிருந்தும் கலைஞர்களை வரவழைத்துள்ளோம். எங்கள் அமைப்பின் பங்களிப்போடு இது போன்ற பண்பாட்டை மக்கள் முன் கொண்டு வர நகரில் பலர் மனம் இசைந்து ஸ்பான்சர் செய்தது மிகப் பெரிய விஷயமாகக் கருதுகிறோம். ஆனாலும் இந்த பண்பாட்டுத் திருவிழாவை நடத்த பல தடைகள். அவைகளையும் தகர்த்துத் தாண்டி நம் தமிழரின் கலையை இனிய விழாவாக மேடையிலேற்றிருக்கிறோம். என்கிறார்கள் இந்த அமைப்பின் நிர்வாகிகள்.

தைத்திரு நாளில் உருப்படியான பண்பாட்டுத் திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள். இளைய தலைமுறையினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT