ADVERTISEMENT

கர்நாடகா சாமியாரின் சங்கு பூஜை; திருவண்ணாமலையில் சர்ச்சை

06:32 PM Apr 15, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் சித்திரை 1 ஆம் தேதியை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்காக ஆந்திரா மற்றும் திருவண்ணாமலை சேர்ந்த பசி பவுண்டேஷன் மற்றும் வஜ்ர வராகி பீடம் என்ற இந்து மத அமைப்பு சங்கு ஊதி உலக சாதனை படைக்க முடிவு செய்தது. ஒரே நேரத்தில் 1008 நபர்கள் சங்குகளை தொடர்ந்து 15 வினாடிகளுக்கு ஒருமுறை என மூன்று முறை சங்குகளை முழங்குவது உலக சாதனை முயற்சியாக இருந்தது. அதனை முறியடிக்க 1039 நபர்கள் தொடர்ந்து 26.2 வினாடிகள் சங்குகளை ஊதி உலக சாதனை நிகழ்வுகளை நிகழ்த்தினார்கள்.

இந்த உலக சாதனை நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்னியாசிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சங்கு வழங்கப்பட்டு இந்த உலக சாதனைக்காக சங்கு ஊதப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம், கடவுள் வேடமணிந்து பலருடைய நடனம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இதற்காக கல்லூரி வளாகத்தில் காவி கொடி ஏற்றி, மேடை அமைத்து அதகளம் செய்து இருந்தனர்.

உலக சாதனை என்கிற பெயரில் ஆன்மீக அமைப்பு ஒன்று இப்படியொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இந்து கொள்கையை பரப்பியுள்ளனர். இதற்கு அரசு கல்வி நிறுவனம் எப்படி அனுமதி வழங்கலாம் என சி.பி.எம் உட்பட சமூக நல ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதேபோல் வேறு மத அமைப்புகள், அரசியல் கட்சிகள், பகுத்தறிவு இயக்கங்கள் அனுமதி கேட்டால் கல்லூரி நிர்வாகம் அனுமதி தருமா என்கிற கேள்வியை எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பசி பவுண்டேஷன் மற்றும் வஜ்ர வராகி பீடம் என்ற அமைப்பு. இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் ஆதரவாக இருந்தார்கள் அவர்கள்தான் அரசு கல்லூரிக்குள் அனுமதி தரவைத்தார்கள் என குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய கல்லூரி முதல்வர் உட்பட சம்மந்தப்பட்ட அனைவரும் அமைதியாகவே உள்ளார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT