ADVERTISEMENT

சேலம் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை! வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு!!

11:08 AM Sep 10, 2018 | elayaraja


சேலத்தில் கணவர், மாமியாரின் வரதட்சணை கொடுமையை தாங்க முடியாத விரக்தியில் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரிக்கரை அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் புவனா என்கிற புவனேஸ்வரி (33). இவருக்கு, பழைய சூரமங்கலம் கபிலர் தெருவைச் சேர்ந்த கவுதமன் என்பவருடன் மூன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

கடந்த 2008ம் ஆண்டு தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலராக புவனேஸ்வரி (காவலர் எண்: 1204) பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம் போலீஸ் பயிற்சிப்பள்ளியில் பயிற்சியை நிறைவு செய்தார். சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த புவனேஸ்வரி, கடந்த ஜூலை 9ம் தேதி, ஜலகண்டபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

புவனேஸ்வரி கம்ப்யூட்டரில் பயிற்சி பெற்றவர் என்பதால், ஜலகண்டாபுரத்தில் இருந்து சில நாள்களிலேயே சேலம் மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு பணிக்கு அழைக்கப்பட்டார். கணவர், மாமியார் ஆகியோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக சமீப காலமாக பெற்றோர் வீட்டில் இருந்துதான் அலுவலகத்துக்குச் சென்று வந்தார்.

நேற்று இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இன்று அதிகாலை தந்தை செல்வராஜ் எழுந்து பார்த்தபோது, வீட்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு புவனேஸ்வரி சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகளின் நிலையைக் கண்டு மொத்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணத்தின்போது புவனேஸ்வரிக்கு 25 பவுன் நகைகளும், பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு உள்ளன. கவுதமன் பி.டெக். இன்ஜினியரிங் படித்துள்ளதால் வரதட்சணையாக 50 பவுன் நகைகள் வேண்டும் என்று திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் கேட்டுள்ளனர். அப்போது, விடுபட்ட சீதனத்தை பின்னர் தருவதாக புவனேஸ்வரியின் பெற்றோர் கூறியதாக தெரிகிறது. ஆனால் சொன்னபடி அவர்களால் வரதட்சணை கொடுக்க முடியவில்லை.

இதனால் மாமியார் தொடர்ந்து புவனேஸ்வரியிடம் பெற்றோரிடம் இருந்து நகைகளை வாங்கி வரும்படி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், மகனிடமும் பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளார். இதற்கிடையே, அவருக்கு கவுதமனிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸூம் அனுப்பப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT


சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், விவாகரத்து கொடுக்க விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார். ஆனாலும், கணவரை சந்தித்துப்பேச மாமியார் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். மேலும், எப்படியாவது விவாகரத்து பெற்று, மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் முடிக்கவும் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட விரக்தியால்தான் புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. புவனேஸ்வரி தற்கொலை பற்றி அறிந்த சக பெண் போலீசார் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

சேலம் மாவட்ட ஆயுதப்படையில் புவனேஸ்வரியுடன் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர் கூறுகையில், ''புவனாவும் நானும் ஒரே 'பேட்ச்'தான். ஒன்றாகத்தான் காஞ்சிபுரத்தில் பயிற்சியை நிறைவு செய்தோம். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். நிறைய காமெடியாக பேசுவார்.

பெரும்பாலும் அவர் சொந்த விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார். சில நேரங்களில் சொந்த விஷயங்களைப் பேசியிருக்கிறார். அவருடைய கணவர் வேலைக்கு எதுவும் போகவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் மீது ரொம்பவே உயிராக இருப்பதாகவும், மாமியார்தான் கணவருடன் பேச அனுமதிப்பதில்லை என்றும் சொல்வார்.

மாமியார் பணம், நகைகள் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்குமேல் அதைப்பற்றி விரிவாக எதுவும் சொன்னதில்லை. புவனாவின் தங்கையும் பெண் காவலர்தான். அவரிடம் கூட ஏதோ மனஸ்தாபத்தில் பேசாமல் இருந்து வந்தார்.

குடும்ப பிரச்னைகளால் புவனா, அனுமதியின்றி தொடர்ந்து இரண்டு மாதங்கள் விடுப்பில் இருந்தார். அதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய புரமோஷன் கூட கடைசி நேரத்தில் கிடைக்காமல் போய்விட்து. எங்கே, எப்போது பணிக்கு அனுப்பினாலும் சளைக்காமல் பணியாற்றுவார். அவருக்கு சாப்பிடுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். புவனாவுடன் பழகிய நாள்களை மறக்க முடியாது,'' என்று கூறி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

திருமணம் ஆகி ஏழு ஆண்டுகளுக்குள் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கை சேலம் கோட்டாட்சியர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT