ADVERTISEMENT

மாஸ்க் அணியாதவர்களுக்கு முற்றும் நெருக்கடி!!  60 நாட்களில் 44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்த சேலம் மாநகராட்சி... 

11:40 PM Jun 15, 2020 | kalaimohan


சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து, கடந்த 60 நாள்களில் 44.47 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மாநகராட்சி, அணியாத நபர்களுக்கு அபராதம் மூலம் கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்று அபாயம் காரணமாக முதன்முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதே, சேலத்தில் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. பொதுவெளியில் நடமாடுவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஏப்ரல் 16ம் தேதி உத்தரவிட்டது.

அதன்பிறகே, முகக்கவசம் அணிவதன் அவசியத்தை ஓரளவு மக்களும் உணர்ந்தனர். இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க சேலம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டன. சிறப்புக் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய அதிரடி தணிக்கையில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் நடப்பு ஜூன் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து 44 லட்சத்து 47 ஆயிரத்து 385 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 49,699 நபர்களிடம் இருந்து இத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக சூரமங்கலத்தில், 9.82 லட்சம் ரூபாய், அஸ்தம்பட்டியில் 12.91 லட்சம் ரூபாய், அம்மாபேட்டையில் 11.31 லட்சம் ரூபாய், கொண்டலாம்பட்டியில் 10.42 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இக்கண்காணிப்புக் குழுவினர் நாள்தோறும் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிகின்றனரா என தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் முகக்கவசம், கையுறை அணிந்தே பொருள்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் மக்களுக்கு பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. இந்த விதிகளை மீறும் கடைக்காரர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுடன், கடையை மூடி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT