ADVERTISEMENT

விளை நிலத்தில் எண்ணெய் குழாய்கள் பதிக்காதே! விவசாயிகள் கொதிப்பு!!

11:57 PM Sep 09, 2019 | santhoshb@nakk…

விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூர் தேவணகொந்தி வரை பாரத் பெட்ரோலிய நிறுவனம் (பிபிசிஎல்) சார்பில் எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் ஓரமாக எண்ணெய் குழாய்களை பதிக்கக்கோரி, விவசாயிகள் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை (செப். 9) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, திமுக விவசாயத் தொழிலாளர் அணி இணை செயலாளர் காவேரி ஆகியோர் தலைமையில் இப்போராட்டம் நடந்தது. விவசாயிகளை பாதிக்காத வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தக்கோரி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT

இதுகுறித்து விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் கூறுகையில், ''விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டால், ஏழை விவசாயிகள் பல்வேறு துயரங்களைச் சந்திக்க நேரிடும். எங்களின் விவசாய நிலங்கள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய் விடும். அதனால் விவசாயம், மரப்பயிர்கள் பயிரிட முடியாததுடன், வீடு கட்டவும் முடியாது.

எனவே, இத்திட்டத்தை விளை நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலை ஓரமாக செயல்படுத்த வேண்டும். இதை மீறும்பட்சத்தில், தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார். இதையடுத்து, விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT