ADVERTISEMENT

நாடக நடிகரை சுட்டுக்கொன்ற வாழப்பாடி தொழிலாளி கைது; நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்!

06:58 PM Nov 25, 2018 | elayaraja


சேலம் அருகே, மான் வேட்டைக்குச் சென்றபோது நாட்டுத்துப்பாக்கியால் நாடக நடிகரை சுட்டுக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கருமந்துறை கல்வராயன் மலையில் உள்ள கலக்கம்பாடியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் செல்வம் என்கிற செல்வராஜ் (45). தெருக்கூத்து கலைஞர். காளியம்மன் நாடக்குழு என்ற குழுவின் சார்பிலும் அடிக்கடி மேடை நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.

ADVERTISEMENT


நேற்று முன்தினம் செல்வராஜ், அதே ஊரைச் சேர்ந்த பாண்டியன், பெரியசாமி, பூச்சி ஆகிய மூன்று பேருடன் மான், முயல், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக கல்வராயன் மலைப்பகுதிக்குள் சென்றார். அன்று இரவு, பெரியசாமியும், பூச்சியும் சேர்ந்து செல்வராஜை சடலமாக தூக்கிவந்து அவருடைய வீட்டில் ஒப்படைத்தனர். வேட்டைக்குச் சென்றிருந்தபோது, பாண்டியன் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி கைதவறி வெடித்ததில் செல்வராஜ் மீது குண்டுகள் பாய்ந்து இறந்துவிட்டதாகக் கூறினர்.


இதுகுறித்து வாழப்பாடி டிஎஸ்பி சூர்யமூர்த்தி, கரியகோயில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர்.


பிரேத பரிசோதனையில் செல்வராஜியின் முதுகு பகுதியில் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்திருப்பது தெரிய வந்தது. மேலும், கைதவறி குண்டுகள் பாயவில்லை என்பதும் அவரை சுட்டுக்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.


இதையடுத்து பெரியசாமி, பூச்சி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம், காட்டுப்பன்றிக்கு பாண்டியன் குறி வைத்து சுட்டபோது, கைதவறி செல்வராஜ் மீது பாய்ந்து விட்டதாக கூறினர். இதனால் தலைமறைவான பாண்டியனை (55) போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இன்று (நவம்பர் 25, 2018) காலை அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.


பாண்டியனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொல்லப்பட்ட செல்வராஜ், காளியம்மன் நாடகக் குழுவில் முக்கிய நடிகராக இருந்துள்ளார். அவருடன் அடிக்கடி பாண்டியனும் நடிக்கச் சென்றுள்ளார். அப்போது சில காரணங்களால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் செல்வராஜை திட்டமிட்டு பெரியசாமியும், பூச்சியும் மான் வேட்டைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.


அங்கு நாட்டுத்துப்பாக்கியால் பாண்டியன் திட்டமிட்டே அவரை சுட்டுக்கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT