ADVERTISEMENT

முதல்வருக்கு ஒரு சட்டம்... எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறொரு சட்டமா? திமுக எம்.பி., விளாசல்!

09:20 PM Apr 18, 2020 | kalaimohan

ஊரடங்கு உத்தரவைமீறி, பலதுறை அதிகாரிகளை ஒரே இடத்தில் அழைத்து வந்து கூட்டம் நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி., பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (ஏப். 17) நேரில் ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT


ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தியது விதிகளை மீறிய செயல் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்பி பார்த்திபன், ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

ADVERTISEMENT



இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது யாருமே கூட்டம் போடக்கூடாது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது எனும்போது, முதல்வர் மட்டும் சட்டத்தை மீறி கூட்டம் நடத்தி இருக்கிறார்.



கடந்த இரு நாள்களுக்கு முன்பு, திமுக தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், ஊரடங்கை காரணம் காட்டி அக்கூட்டத்திற்கு தடை விதித்தனர். அரசியல் உள்நோக்கத்தோடு எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டத்திற்கு முதல்வர் தடை விதித்தார். இப்போது அவரே அதிகாரிகளை அழைத்து வைத்துக் கூட்டம் நடத்துகிறார். முதல்வருக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சித் தலைவர் என்றால் வேறொரு சட்டமா?

மக்கள் நலனில் அக்கறை இருப்பதால்தான், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் அழைத்து ஆலோசிக்க தடை வந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவர் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மக்கள் நலனையும், சட்டத்தையும் மதிக்கும் முதல்வராக இருந்தால் அவரும் காணொலி மூலமே ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கலாமே?

எதிர்க்கட்சியினர் பதினோரு பேர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கே தடை விதிக்கும் இந்த அரசு, 30 அதிகாரிகளை வரவழைத்து கூட்டம் நடத்துவது சரியானதா?. சி.ஆர்.பி.சி. 144வது பிரிவுக்கு எதிராகவும், பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்ட முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம், சென்னை ஆகிய மாவட்டங்கள் கரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட் ஆக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், முதல்வர் இதுபோன்ற கூட்டங்களை நடத்துவதும் சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமின்றி, நோய்த்தொற்றுக்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு பார்த்திபன் எம்பி, ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கூறினர். இது தொடர்பாக அவர்கள் சேலம் மாநகர காவல்துறை ஆணையர், நகர காவல் ஆய்வாளர் ஆகியோரிடமும் புகார் அளித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT