ADVERTISEMENT

15 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்துவரும் விவசாயி சச்சிதானந்தம்..!

11:45 AM Dec 14, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், டெல்டா பகுதியான திருமானூர் அருகே உள்ள காரைப்பாக்கம் கிராமத்தில் 15 ஆண்டுகளாக பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து அவற்றை மீட்டெடுத்து, பொதுமக்களுக்கு இயற்கை விவசாயத்தில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், கரும்பு, வெல்லம் போன்றவற்றை வழங்கி, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் அரிய பணியில் சாதனை படைத்துவருகிறார் இயற்கை விவசாயி சச்சிதானந்தம்.

இது குறித்து இயற்கை விவசாயி சச்சிதானந்தம் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுடைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அதன்பின்னர் மாப்பிள்ளை சம்பா நெல் வகைகளைத் தனது வயலில் பயிரிட்டு இரசாயனமில்லா விவசாய முறைக்கு மாறியதாகவும் கூறினார்.

பின்னர் மாப்பிள்ளை சம்பா அவல் பயன்படுத்தி அடுப்பில்லாத சமையல் மூலம் கார உணவு, இனிப்பு, பொங்கல், தேங்காய்ப் பால், எலுமிச்சை சாறு கலந்த இயற்கை தயிர் தயாரித்துப் பயன்படுத்திட உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதோடு தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை 20 கிலோ குறைந்து சுறுசுறுப்பாக இருப்பதாகவும் கூறினார்.

அதன் பின்னர் படிப்படியாக பல்வேறு பாரம்பரிய நெல் வகைகளை இயற்கை முறையில் விளைவிக்க எண்ணி, இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து தொடர்ந்து தனது வயல்களில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்துள்ளார். இயற்கை விவசாயத்தில் முன்னோடியாய் விளங்கும் நம்மாழ்வார், இயற்கை விவசாய முறை சுபாஷ் பாலேக்கர் முறை, நாகரெத்தின நாயுடு முறை எனப் பலவகைகளில் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றி விவசாயம் செய்து வருகிறார். ஒரு ஏக்கர் நடவு செய்ய அதிகபட்சமாக 2 கிலோ நெல் போதும் என்கிறார்.

பத்து நாட்கள் கடந்த நாற்றினைப் பிடுங்கி சமப்படுத்தப்பட்ட வயலில் அதிக நீர் தேங்காமல் சேற்றில் ஊன்றி விட்டாலே பயிர் முளைத்துச் செழிக்க ஆரம்பித்துவிடும் என்றார். அதிகப்பட்சமாக ஒரு ஏக்கருக்கு நடவு செலவு ரூ.1,200 முதல் ரூ.1,600 ஆகும் என்கிறார். மேலும் இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் செலவில்லாத இரசாயனமில்லாத விளைபொருட்கள் சுதேசி அதாவது தற்சார்பு வாழ்க்கை வாழ முடியும்.

நோய் என்பதும் வராது. குறிப்பாக புத்தர் சாப்பிட்ட தற்போது வரை புத்தகயாவில் புத்தபிட்சுகள் சாப்பிட்டு வரும் காலாநமக் என்ற பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டுள்ளார். விஞ்ஞான ரீதியாக மனித உடல் இயங்குவதற்கு 80 வகையான தாது சத்துக்கள் தேவைப்படுகிறது. அதில் காலாநமக் என்ற பாரம்பரிய நெல் ரகத்தில் மட்டுமே 40 வகையான தாது சத்துக்கள் நிறைந்திருப்பிருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறுகிறார்கள்.

இந்த நெல் வளர்ந்தவுடன் அரிசி பச்சை நிறத்தில் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் அரசர்கள் மட்டுமே உண்டு வந்த கருப்புக் கவுனி அரிசியைத் தனது வயலில் பயிரிட்டுள்ளோம் என்றும் கேன்சர் போன்ற கொடிய நோயையும் வெல்லும் தன்மை கொண்ட ரகம் என்றும் கூறினார். இது போன்று தனது வயல்களைச் சுற்றி அத்தி மரம், இலந்தை மரம், வேம்பு, புளியமரம், அரச மரம், இலுப்பை மரம், வாழை, தென்னை போன்ற மரபு வகை மரங்களைப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவிடும் வகையில் உருவாக்கி உள்ளார். கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரங்காய், பூசனி, பரங்கிக்காய், சின்னவெங்காயம் எனப் பல வகையிலும் இயற்கை விவசாயம் செய்து வருவதாகக் கூறுகிறார்.

பறவைகளும் பட்டாம் பூச்சிகளும் தட்டானும் பல்வகை நன்மை செய்யும் பூச்சிகளும் நண்டும் ஓடும் வயலாகவும் இருக்கும் தனது வயலில் மண்புழுக்கள் பல்கிப்பெருகி மண்ணை கிளறியும் நெளிந்தும் தினந்தோறும் மண்ணை வளமாக்கும் அரிய நிகழ்வைக் காண கண்கோடி வேண்டும் என்கிறார். இயற்கை விவசாயத்தை குடும்பத்தோடு செய்து வருகிறோம் இதுவே எங்களுக்கு அலாதியான மனநிறைவைத் தருகிறது. மனிதன் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஜீவராசிகளும் உண்ணும் உணவில் இரசாயனமில்லை என்ற ஆத்ம திருப்தி போதும் என்றும் எல்லோரும் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி ஆரோக்கியமாக வாழலாம் என்றும் முடித்தார்.

இவருக்கு வயது 57. பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரமங்கலம் அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி செய்து வருகிறார். இவரது மனைவி சசி, பொறியியல் பட்டதாரியான மகன் என அனைவரும் இயற்கை விவசாயத்தை ஈடுபாட்டுடன் செய்து வருகின்றனர். சாண எரிவாயு அடுப்பு, மழைநீர் சேகரிப்பு, நாட்டுவகை மாடு வளர்ப்பு என அசத்தி வருகிறார். 0 பட்ஜெட்ல விவசாயம் செய்யலாம் கடன் வேண்டாம் நிம்மதியா விவசாயம் செய்ய முடியும் என்பதனை அனுபவப்பூர்வமாகச் செய்து காண்பித்து வருகிறார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT