The doctor who ordered the injection; A youth beaten by a shoe; A viral video

மருத்துவமனையில் ஊசி போடச் சொன்ன பெண் மருத்துவரை இளைஞர் ஒருவர் காலணியால் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் குமிழியம் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது குமிழியம். இங்கு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் குமிழியும் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவருடைய சகோதரி மகனை சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு பணியாற்றி வந்த மருத்துவர் சத்யா சிறுவனுக்கு ஊசி போட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் சிறுவனோ ஊசி போட விடாமல் கத்தி கூச்சலிட்டான். சமாளிக்க முடியாமல் திணறிய சுரேஷ் அங்கு நின்று கொண்டிருந்த மருத்துவர் சத்யாவின் கணவர் சிலம்பரசனை குழந்தையை ஒரு கை பிடித்து ஊசி போட உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் சிலம்பரசன் கையில் குழந்தையுடன் இருந்ததால் தன்னால் பிடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் 'ஒரு உதவி கேட்டால் பண்ண மாட்டியா' என கூச்சலிடத்தொடங்கினார். தொடர்ந்து அங்கு ஏற்பட்ட விவாதமானது கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ் காலில் மாட்டி இருந்த காலணியை எடுத்து மருத்துவர் சத்யாவை தாக்க முயன்றார். மேலும் மருத்துவரின் கணவர் சிலம்பரசனை ''வெளியே போடா... நீ எந்த ஊர்'' என திட்டினார். மருத்துவர் சத்யாவும் 'உன் பிள்ளையை பிடிக்க உன்னால முடியல நீ என்ன திட்றியா' என பதிலுக்கு பேசினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் அளித்தும் ஒருவர் கூட அங்கே வராததால் மருத்துவர் சத்யா இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர். அண்மையில் கேரளாவில் மருத்துவர் ஒருவர் சிகிச்சை பார்க்க வந்த கைதியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.