ADVERTISEMENT

“சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம்..” - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

04:22 PM Jul 27, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைத்தே தீரவேண்டும் என போர்க்கொடி தூக்குகிறார் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். முடியவே முடியாது என்கிறார் இந்நாள் அமைச்சர் பொன்முடி.

கடந்த ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முயற்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. ஆனால், தற்போதைய உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, “பல்கலைக்கழகத்தின் பெயரை மட்டும் தான் அறிவித்தார்கள். எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அதனால் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கிடையாது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து கூட்டு பல்கலைக்கழகமாகச் செயல்படும்” என்று அறிவித்துள்ளார்.

“இதை ஏற்றுக்கொள்ள முடியாது; எங்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், செயல்பட வேண்டும்” என்று தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம், தலைமையில் விழுப்புரத்தில் நேற்று மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் துவக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூடப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கல்வியில் பின்தங்கிய விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு சட்டசபையில் வெளியிடப்பட்டுக் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி கவர்னரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. 26ஆம் தேதி பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் நியமிக்கப்பட்டு 100 கோடி ரூபாய் அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணத்தினால் மேற்கொண்டு பணிகளைச் செய்ய முடியவில்லை.

பல்கலைக்கழகம் உருவாக்கம் அறிவிக்கப்பட்டபோது தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அப்போது, ‘என் தொகுதியில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை எப்படி இரண்டாகப் பிரிக்கலாம்’ என்று கூறினார். திமுகவில் தலைவர்கள் ஊருக்கு ஒரு பேச்சு எனப் பேசி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்க நினைக்கின்றனர். அதற்கு அமைச்சர் பொன்முடி, நிதி இல்லை எனக் கூறி மக்களைத் திசை திருப்பி ஏமாற்றுகிறார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் நடத்த முடியாதவர்கள் தமிழகத்தில் புதியதாகப் பல கலைக் கல்லூரிகள் உருவாக்கப் போவதாகத் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளனர். அது மட்டும் எப்படி சாத்தியம்? ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படுவதால் பொன்முடிக்கு என்ன நஷ்டம்? இதற்காக இந்த தொகுதி எம்.எல்.ஏ.கூட எந்த குரலும் கொடுக்கவில்லை. நூறு கோடி ரூபாய் ஒதுக்கி, பல்கலைக்கழகம் நடத்த ஒப்புதல் அளித்தும் அதைச் செயல்படுத்தாத இவர்கள் மதுரையில் 200 கோடி ரூபாயில் கலைஞரின் பெயரில் நூலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி உள்ளனர். இது எப்படி சாத்தியம்?

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பதாகக் கூறுகின்றனர். இந்தியாவிலேயே மிகவும் மோசமான சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் என்ற நிலை உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் கூடுதலாக நிதி வழங்கி வருகிறது. ஆனால், ஒரு முறை 100 கோடி ரூபாய் ஒதுக்கி புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி நடத்த முடியாது என்பது கேலிக்குரியதாக உள்ளது. ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைவதை ஏற்றுக்கொள்ள பொன்முடி போன்றவர்களுக்கு மனமில்லை. காரணம் அவர் இந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் வைத்து நடத்தி வருகிறார். தனியாக ஒரு பல்கலைக்கழகத்தைத் துவங்க, அவர் நினைத்திருக்கலாம். அதன் காரணமாகக்கூட ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமையக் கூடாது என்ற எண்ணம் இருக்கலாம்.

எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த தவறான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு பெயர் முக்கியமில்லை; நல்ல பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும். விழுப்புரத்தில் சுற்றியுள்ள மாவட்ட மாணவர்கள் சிரமமின்றி பல்கலைக்கழகத்தை அணுக வேண்டும். அதுவே போதும்” இவ்வாறு சி.வி. சண்முகம் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம், தடையை மீறி நடத்தப்பட்டதால் சி.வி. சண்முகம் உட்பட பல அதிமுகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT