ADVERTISEMENT

கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் நிலுவைத் தொகையை வழங்க கடைசி வாய்ப்பு! - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு!

08:12 AM Oct 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளுக்கு 2019- 2020 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையை, டிசம்பர் 14- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பள்ளிக் கல்வித்துறைக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்தும், 2017-18, 2018-19, 2019-20 ஆம் கல்வியாண்டுகளில் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21 ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு, கடந்த முறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2018 - 2019 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்காக 303.70 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், 2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான நிலுவைத் தொகையை விரைவில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை கிடைக்காத தனியார் பள்ளிகள், மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கும் பட்சத்தில், பள்ளிகளின் தகுதியைப் பொறுத்து நிலுவைத்தொகை வழங்கப்படும் என, பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையை, டிசம்பர் 14- ஆம் தேதிக்குள் செலுத்துவதற்குக் கடைசி வாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்த நீதிபதி, அவ்வாறு செலுத்தாத பட்சத்தில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT