ADVERTISEMENT

ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை... மாறுவேட பல்சர்பைக் ஆசாமிகளால் பரபரப்பு!

06:23 PM Sep 08, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்காசி நகரின் 24 மணி நேர பரபரப்பான பகுதியான நெல்லை செல்லும் சாலை, நகரின் மத்தியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியிலுள்ள மட்டப்பா தெருவில் வசிப்பவர் ஜெயபாலன் (61) இவரது மனைவி விஜயலட்சுமி (58) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணமாகி வெளியூரில் இருக்கிறார்.


வெளிநாட்டு மரத் தடிகள் இறக்குமதியாளரான தொழிலதிபர் ஜெயபாலனுக்கு கோவில்பட்டி மற்றும் காஞ்சிபுரத்தில் மர அறுவை மில்கள் இருக்கின்றன. தொழில் நிமித்தமாக ஜெயபாலனும் அவரது மகனும் வெளியூர் சென்று விடுவார்களாம். அந்தச் சமயம் அவரது மனைவி விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியே இருப்பதுண்டாம். இரவில் மட்டும் வாட்ச் மேன் பணியிலிருப்பாராம்.


இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஜெயபாலனும் அவரது மகனும் தொழிலின் பொருட்டு சென்னை செனறவர்கள் கோவில்பட்டியிலுள்ள சா மில்லுக்குத் திரும்பியதாகத் தெரிகிறது. வழக்கம்போல் தென்காசியிலுள்ள வீட்டில் விஜயலட்சுமி மட்டும் தனியே இருந்திருக்கிறார். மதியம் சுமார் ஒருமணியளவில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்திருக்கிறது. சத்தம் கேட்டு வெளியே வந்து கதவைத் திறந்த விஜயலட்சுமியிடம் பல்சர் பைக்கில் ஹெல்மெட்டுடன் வந்தவரின் பின்னாலிருந்த பர்தா போட்ட ஒருவர் குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார்.

அவர்கள் கணவன் மனைவி என யதார்த்தமாக நினைத்துக் கொண்ட விஜயலட்சுமி உள்ளே தண்ணீர் எடுக்கச் சென்றபோது பின்னாலேயே ஹெல்மெட் ஆசாமியும் பர்தா நபரும் சென்றிருக்கிறார்கள். வீட்டின் உள்ளே சென்றவர்கள் திடீரென விஜயலட்சுமி வாயைப் பொத்தி மிரட்டி படுக்கை அறைக்குள் கொண்டு சென்று, அங்கு கிடந்த வயர்களால் அவரின் கை கால்களைக் கட்டியிருக்கிறார்கள். பணம் இருக்கும் இடத்தைக் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். பிறகு கபோர்டை திறந்து 100 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் போன்றவைகளைக் கொள்ளையடித்துவிட்டு பின்பு, விஜயலட்சுமி கத்தாமலிருக்க அவரது வாயில் டேப்பை ஒட்டி விட்டுத் தப்பியிருக்கின்றனர்.

படுக்கையறையிலிருந்து உருண்டபடி வாசலுக்குவந்த விஜயலட்சுமியை பக்கத்திலுள்ளவர்கள் மீட்டு போலீசுக்கு தகவல் கொடுக்க பின் தொழிலதிபர் ஜெயபாலனுக்கும் தகவல் போய் அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த தென்காசி டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன், குற்றலாம் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தென்காசி எஸ்.ஐ.மாதவன் உள்ளிட்ட போலீசார் வீட்டைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.


தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுக் கைரேகை உள்ளிட்ட தடயங்களைப் பதிவு செய்தனர். வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் மேற்கு நோக்கி பெருமாள் கோவில் வரை சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்தது. வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வளவு பெரிய வீட்டில் சி.சி.டி.வி கூட வைக்கப்படவில்லை என்று சொல்லும் விசாரணை போலீசார், அந்த பகுதியிலுள்ள சி.சி.டிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தென்காசியின் வரலாற்றில் நடந்த சுமார் 25 லட்சத்துக்கும் மேலான மிகப்பெரிய பட்டப்பகல் கொள்ளை இதுவாகும். நகரையே உலுக்கியுள்ளது. தவிர வந்தவர்கள் கணவன் மனைவி போன்று இருந்துள்ளனர். அதாவது, பர்தா போட்ட கொள்ளையன் மனைவி போல வந்திருக்கிறான் அதுதான் சந்தேகம் வரவில்லை. சம்பவங்களை ஆராயும் போது இது திடீர் சம்பவமல்ல. பல நாட்கள் நோட்டமிட்டு நடந்திருக்கலாம். மேலும் கொள்ளையின்போது பாதிக்கப்பட்டவரின் வாயில் டேப்பை ஒட்டிவிட்டுச் சென்றது மாதிரியான சம்பவம் தென்பக்கம் நடந்ததில்லை. என்கிறார்கள் குற்றப்பிரிவு புலனாய்வின் பணி நிறைவுப் போலீசார்.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம்கூட அண்மையில் தான் வங்கியிலிருந்து எடுத்து வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு 3 தனிப்படைகளை அமைத்திருக்கிறார் மாவட்ட எஸ்.பி.யான சுகுணா சிங். நடத்தப்பட்ட இந்தப் பெரிய கொள்ளையில் தொடர்புடையவர்கள் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா அல்லது அண்டையிலுள்ள கேரளாவைச் சேர்ந்தவர்களா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசாரின் விசாரணை தீவிரமாகி இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT