ADVERTISEMENT

பிச்சைக்காரரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 2 இலட்சம்..! காவல்துறை மீட்டது எப்படி..?

03:21 PM Aug 06, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரை ஒட்டியுள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயதானவர் சண்முகையா. உறவுகள் இருந்தும் கவனிப்பாரின்றிப் புறக்கணிக்கப்பட்டவர். இவரது முதல் மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இரண்டாவது மனைவியோ உடல்நலம் சரியில்லாத நிலையில் இவரைவிட்டு ஒதுங்கியிருக்கிறார். முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து புறக்கணிக்கப்பட்ட சண்முகையா, அருகிலுள்ள சங்கரன்கோவில் நகரின் வீதிகளில் பிச்சை எடுத்து தனது ஜீவனத்தை நடத்திவந்திருக்கிறார்.

ஒரு கால் உடைந்த நிலையில் அவரால் சரியாக உட்காரவும் முடியாத நிலை. இதனால், சாப்பிடுவது, டீ குடிப்பது உள்ளிட்டவற்றை நின்றுகொண்டே செய்ய வேண்டிய கஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அன்றாடம் பஜார் வீதிகள், கோவில் பகுதிகளில் பிச்சை எடுக்கும் சண்முகையா, தனக்கான உணவுச் செலவுபோக மீதமுள்ளவற்றைத் தன்னுடைய மூட்டையில் பாதுகாப்பாக வைத்திருப்பார்.

சண்முகையா

எங்கு சென்றாலும் அந்த மூட்டையை எடுத்துக்கொண்டே செல்வார். அதைவிட்டுப் பிரியமாட்டார். டீ குடிக்கும்போதும், உணவு சாப்பிடும்போதும் கூட அவர் தன் தலையில் உள்ள மூட்டையை கீழே இறக்கி வைத்தது கிடையாது. இதில் மிகவும் கவனமாகவும் செயல்பட்டுவந்திருக்கிறார். கசங்கிப் போன கந்தலான ஆடை, பரட்டைத் தலை என மிகவும் பரிதாபமாகக் காட்சியளிக்கும் இந்த ஜீவனைக் கண்டு இரக்கப்பட்ட பலர், இயன்றளவு பிச்சை போட்டுள்ளனர். பேருந்து நிலையம், கோவிலின் மாட வீதிகளில் இரவு பொழுதைக் கழிக்கும் சண்முகையா, அதுசமயம் கூட தன்னுடைய மூட்டையைக் கவனமாக வைத்திருப்பதுண்டாம்.

இப்படி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தினசரி வீதிகளில் பிச்சை எடுத்துப் பிழைப்பை ஓட்டும் சண்முகையா, தனக்கான அன்றாடச் செலவு போக மீதமுள்ளவற்றறைப் பத்திரமாக தனது மூட்டைக்குள் வைத்துப் பாதுகாத்துவந்திருக்கிறார். பிச்சை சரிவரக் கிடைக்காத நிலையில் அன்றைய தினம் தனக்கான உணவுச் செலவுகளுக்கு இந்த சேமிப்பு உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு சிறுகச் சிறுக சேமித்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று பஜார் வீதியிலிருக்கும் டீ கடை ஒன்றில் டீ குடிப்பதற்காகப் போயிருக்கிறார். அப்போது அந்தக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், தன் தலையில் இருந்த மூட்டையைச் சண்முகையா ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு டீ வாங்கிக் குடித்திருக்கிறார். திரும்பி வந்து பார்க்கும்போது தனது அழுக்கேறிப் போன மூட்டை திருடு போனது தெரியவர, பதறிப்போனவர் அருகிலுள்ள போலீஸ் அவுட்போஸ்ட்டிலிருந்த போலீசாரிடம் படபடப்பாக நடந்ததைத் தெரிவித்திருக்கிறார்.

கொள்ளையர்கள்


“ஐயா, இத்தனை வருட காலம் நான் பிச்சை எடுத்து செலவு பண்ணுனது போக 2 லட்சத்துக்கும் மேல மூட்டையில சேமிச்சு வச்சிருந்தேம்யா. அது திருடு போயிருச்சுய்யா” என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கதறியிருக்கிறார் சண்முகையா. இந்தத் தகவலறிந்த சங்கரன்கோவில் டவுண் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார், விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை அவர்கள் ஆராய்ந்தபோது, லுங்கி கட்டிய ஒருவர் சண்முகையாவின் மூட்டையைத் திருடிக்கொண்டு போவது தெரியவந்திருக்கிறது.

அவரை அடையாளம் கண்ட போலீசார், அவரைக் கஸ்டடிக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அவரிடம் முறையாக விசாரணையை மேற்கொண்டபோதுதான், அவர் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. அடுத்த அவரது கூட்டாளியான ஸ்ரீனிவாசன், உலகநாதன், ராஜபாளையத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்த பணத்தை மீட்டிருக்கிறார்கள். மேலும் விசாரணையில், சொகுசான வாழ்க்கை வாழ்வதற்காக இந்தப் பணத்தைத் திருடியதாக அந்த நான்கு பேரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து நாம் இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் பேசியபோது, “இது ரொம்பவும் பரிதாபமான சம்பவம். பாவப்பட்ட பிச்சைக்காரரிடமே திருடியது ரொம்பக் கொடுமை. இதில் சம்பந்தப்பட்டக் குற்றவாளிகளை ஒரே நாளில் பிடித்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தில்தான், அன்றைய தினம் இரவு விடிய விடிய பல இடங்களுக்கு அலைந்து, ஐந்து குற்றவாளிகளையும் தூக்கியுள்ளோம். அவர்களிடமிருந்த மிச்சமுள்ள 49,320 ரூபாயை ரெக்கவரி செய்யப்பட்டிருக்கு. பாவம் அந்தப் பிச்சைக்காரரின் கால் உடைந்துபோனதால் அவரால் நின்றுகொண்டுதான் சாப்பிட முடிகிறது.

பிடிபட்டவர்களில் ராஜபாளையம் முருகன் என்பவன், தண்ணி அடிச்சிட்டு பஸ் ஸ்டாண்டில் படுத்துக்கிடப்பவன். அப்போதுதான் அவனுக்கு சண்முகையாவிடம் பணம் இருப்பது தெரியவந்திருக்கிறது. அப்போதே அதை அடிக்க வேண்டுமென்று திட்டம் போட்டிருக்கிறான். அதனால்தான் அன்றைய தினம் திட்டமிட்டு சண்முகையாவை முருகன், டீ குடிப்பதற்கு கூட்டிச் சென்றபோது வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட அவனது கூட்டாளிகள், மூட்டையைத் திருடிக்கொண்டு போயிருக்கிறார்கள். இதில் முருகன் என்பவன் 20,000 ரூபாய்க்கு அடமானத்திலிருந்த தனது வீட்டு நகையை, திருடிய பணம் மூலமாகத் திருப்பியிருக்கிறான். ஒருத்தன் 5000, இன்னொருத்தன் 2,500 பங்கு வாங்கிட்டுத் தேனிக்கு ஓடிட்டான். திருடிவிட்டு வேறு எங்கும் போகாமல் இங்கேயே இருந்திருக்கிறார்கள். ஜாலியாக செலவு செய்துவிட்டு, குமாரும் இன்னொருத்தனும் விடிய விடிய 3,000 ரூபாய்க்கு மேல குடிச்சிருக்காங்க. இதுல ஒருத்தன் பூக்கடையில் உள்ள சில்லரைப் பணத்தையும் திருடிச் செலவழிச்சவன். இவங்க ஐந்து பேரையும் உள்ள தள்ளியிருக்கிறோம். பாவம் 10 வருசத்துக்கு மேல பிச்சை எடுத்து சேமித்த சண்முகையா, தன்னுடைய சிறிய வீடு ஒன்றின் பராமரிப்புச் செலவுக்காக ஒன்றரை லட்சம் கொடுத்திருக்கிறார். ஒருவனுடைய மனமும் உடலும் இயங்காதபோதுதான் அவன் பிச்சை எடுக்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறான். அந்தப் பரிதாபப் பிச்சைக்காரனிடமே திருடுவது கொடுமையிலும் கொடுமை. பஞ்சமா பாதகம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT