ADVERTISEMENT

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவந்த பெண்ணிடம் ரூ.15,000 மோசடி; இளைஞரை தேடும் போலீஸ்...

04:06 PM Oct 12, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணக்கொடையான் என்ற கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மனைவி வள்ளி வயது 40. இவரது கணவர் முத்து வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது மனைவிக்கு வெளிநாட்டிலிருந்து குடும்ப செலவிற்காக பணம் அனுப்பி வைப்பார்.

வள்ளி அவர் வசித்துவரும் பகுதியில் ஒருபெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். பெட்டிக் கடைக்கு சாமான்கள் வாங்குவதற்காக அவ்வப்போது பெண்ணாடம் செல்வார். அதேபோன்று சம்பவத்தன்று பெண்ணாடம் வந்த வள்ளி, தன்னுடைய கணவர் தனக்கு அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக பெண்ணாடம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த மையத்தின் உள்ளே இருந்த 27 வயது மதிக்கத்தக்க வாலிபர், பணம் எடுப்பதற்காக வந்தவர் போல் உள்ளே இருந்துள்ளார். அவரிடம் தனது ஏ.டி.எம். கார்டு மற்றும் நம்பரை கொடுத்து ரூ.20 ஆயிரம் பணம் எடுத்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அந்த நபர் ரூ.5,000 மட்டுமே எடுத்துக் கொடுத்துவிட்டு, ஏ.டி.எம்-ல் இதற்கு மேல் பணம் இல்லை. நீங்கள் வேறு ஏ.டி.எம் சென்று மீதி பணம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வள்ளியிடம் அவரது ஏ.டி.எம் கார்டை கொடுத்துள்ளார். இந்நிலையில், சென்னையில் உள்ள வள்ளியின் மகன் விவேக் செல்போன் எண்ணுக்கு ஏ.டி.எம்-ல் இருந்து ரூ.20,000 பணம் எடுத்த குறுஞ்செய்தி சென்றுள்ளது.

இதுகுறித்து அவர், தனது தாய் வள்ளியிடம் கேட்டுள்ளார். அப்போது வள்ளி 5,000 ரூபாய் மட்டுமே எடுத்துள்ளதாகவும் அதுவும் கூட ஏ.டி.எம்-ல் இருந்த ஒரு வாலிபர் அந்த பணத்தை எடுத்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை அறிந்தார். மேலும் அவரிடம் அந்த வாலிபர் கொடுத்த ஏ.டி.எம் கார்டும் போலியானது என்று தெரியவந்துள்ளது. வள்ளியிடம் ரூ.5,000 பணம் எடுத்துக் கொடுத்து விட்டு அவரது கார்டை வைத்து மேலும் 15 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த மர்ம வாலிபர் அங்கிருந்து மறைந்துவிட்டார்.

இதையடுத்து வள்ளி பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஏ.டி.எம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஏ.டி.எம்-ல் மோசடி செய்து பணம் எடுத்த அந்த இளைஞரை தேடி வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT