ADVERTISEMENT

காரில் சென்ற ரவுடியை மடக்கிய மர்ம கும்பல்... அரிவாளால் சரமாரி வெட்டி கொலை!

09:48 AM Jul 01, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தளி அருகே, காரில் சென்ற ரவுடியை மடக்கிய மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள கும்மளாபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் உதயகுமார் (30), ரவுடி. இவர் மீது தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் ஒரு காவல் நிலையம் என மொத்தம் இரு காவல் நிலையங்களில் 3 கொலை வழக்குகள் விசாரணையில் உள்ளன.

ஏற்கனவே இவர் ஒருமுறை குண்டர் சட்டத்திலும் சிறைக்குச் சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் (ஜூன் 29) இரவு, உதயகுமார் காரில் கும்மளாபுரத்தில் உள்ள கவுரம்மா கோயில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்தது. ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் தன்னைச் சுற்றிவிட்டதை உணர்ந்த உதயகுமார், திடீரென்று காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்திச்சென்ற மர்ம நபர்கள், உதயகுமாரின் பின் கழுத்து, தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

கொலை திட்டத்தை நிறைவேற்றிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. கிருத்திகா, தளி காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலம், உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும், கொலையுண்ட ரவுடி உதயகுமாரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது பழிக்குப் பழியாக இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், கொலையுண்ட உதயகுமாரின் செல்ஃபோனுக்கு கடந்த ஒரு வாரமாக வந்த மற்றும் அவர் பேசிய செல்ஃபோன் எண்களின் தரவுகளைச் சேகரித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, மது போதையில் தளி அருகே மதகொண்டப்பள்ளியில் இளைஞர் ஒருவர் மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே காவல் நிலைய சரகத்தில் ரவுடி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT