ADVERTISEMENT

     காவலர் தேர்வில் கள்ளத்தனம்!   பெண் தலைமுடிக்குள் காகித அட்டை! -தேர்வுமுறையில் மாற்றம் தேவை!

07:09 PM Sep 08, 2018 | cnramki

ADVERTISEMENT

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 6140 பேரை தேர்வு செய்வதற்கு, கடந்த மார்ச் 11-ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 2.88 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்போது உடல் திறன் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

உடல் திறன் தேர்வைப் பொறுத்தமட்டிலும், 1500 மீட்டர் ஓட்டத்தை 7 நிமிடத்திற்குள் ஆண்கள் கட்டாயம் முடிக்க வேண்டும். ஆண், உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீ. என்றும் பெண், உயரம் 159 செ.மீ. என்றும் பட்டியல் இனத்தை சேர்ந்த ஆண், குறைந்த பட்சம் 167 செ.மீ. என்றும் பெண் 157 செ.மீ. என்றும் இருக்க வேண்டும்.

சென்னையில் இன்று நடைபெற்ற உடல் திறன் தேர்வில் பங்கேற்ற ஒரு பெண், தனது உயரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக தலைமுடியை ஒரு பக்கமாக வகிடு எடுத்து, நடுவே காகித அட்டையை மறைத்து வந்துள்ளார். உயரத்தை அளவிடும்போது, தலைமுடி வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த தேர்வுக் குழுவினர், அவரை அங்கேயே நிறுத்தி, தகுதி இழப்பு செய்து அனுப்பிவிட்டனர்.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, “இன்றைய தேர்வில் பங்கேற்ற பலரும் போலீஸ் வேலைக்கு ஏற்ற உடல்வாகு இல்லாதவர்கள். அதாவது, காவலர் தேர்வு என்றதும் விண்ணப்பித்து, தேர்வு எழுதி அதில் தேர்வாகி வருகின்றனர். ஆனால், மார்பு சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ., விரியும் நிலையில் 85 செ.மீ. இருக்க வேண்டும் என்பது விதி. அதுபோல், உயரமும் நிர்ணயிக்கப்பட்ட அளவு இருக்க வேண்டும். இதுதெரியாமல் பலர், இன்றைய தேர்வுக்கு வந்திருக்கின்றனர். ஒரு சிலர் மைதானம் பக்கமே போகாதவர்கள். அவர்களால், சென்னையில் அடிக்கிற வெயிலில் ஓட முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டனர்.” என்றார் தேர்வுக் குழுவில் இடம்பெற்ற ஒரு அதிகாரி.

மேலும் அவர், “10 ஆண்டுகளுக்கு முன்பு, முதலில் உடல் திறன் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வானவர்கள்தான், எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். உடல்திறன் தேர்வின்போதே, வாட்ட சாட்டமாக, நல்ல உடன் திறன் கொண்டவர்களை பொறுக்கி எடுத்து தேர்வு எழுத வைப்போம். இப்போதுள்ள நடைமுறையே வேறு. முதலில் எழுத்துத் தேர்வு நடக்கிறது.

இதில் தேர்வானவர்கள்தான், ஓடச் சொல்லும் போது ஓடமுடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது, 1:5 என்ற விகிதத்தில் உடல்திறன் தேர்வுக்கு அழைத்திருக்கிறோம். வந்தவர்களில் சிலரை இப்போதே ‘அன்ஃபிட்’ என்று கூறி அனுப்பிவிட்டோம். இனிவரும் காலத்திலாவது, முதலில் உடல்திறன் தேர்வு நடத்தி, அதில் தகுதியானவர்களைத் தேர்வு செய்து, அவர்களுடைய புத்திக் கூர்மையை பரிசோதிக்கும் விதத்தில், எழுத்து தேர்வு நடத்த வேண்டும். அப்போது தான், கம்பீரமான, கட்டுமஸ்தான போலீஸ் படையை உருவாக்க முடியும்.” என்றார்.

தகுதி உள்ளவர்களே தமிழகத்தில் காவலர்கள் ஆகவேண்டும்!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT