ADVERTISEMENT

பேருந்தில் உலா வரும் கொள்ளையர்கள்... போலீசாரின் திடீர் சோதனை!

08:11 AM Nov 15, 2019 | kalaimohan

தொடர்ந்து துணிகர சம்பவமாக ஈரோட்டில் கொள்ளை நடந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

ஈரோட்டையடுத்த மொடக்குறிச்சி செல்லும் வழியில் உள்ளது சின்னியம்பாளையம். இங்கு வசிக்கும் செல்வி என்பவருக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வியின் வீடு சின்னியம்பாளையம் பேருந்து நிறுத்தத்தையொட்டியே உள்ளது. வீட்டில் முன்பு சொந்தமாக டீ கடை நடத்தி வருகிறார் செல்வி. இந்நிலையில் சென்ற செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு வந்தனர்.

ADVERTISEMENT


அப்போது வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பின்னர் பீரோ இருக்கும் அறையில் சென்று பார்த்தபோது பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ 56 ஆயிரம் பணம் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது. அதேபோல் பீரேவில் இருந்த அரை கிலோ வெள்ளியும் மர்ம நபர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் அதை நோட்டமிட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள், பூட்டி இருக்கும் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடித்தல் போன்ற குற்றச் செயல்கள் நடக்கிறது. இதனையடுத்து குற்றச் செயலில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இந்த தொடர் திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள் பொது மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்வது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்று ஈரோடு மாநகர பகுதிக்கு உட்பட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் திடீரென தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான காளைமாடு சிலை, ஈரோடு பஸ் நிலையம், சக்தி ஈரோடு பவானி, ஈரோடு காவிரி ரோடு, ஆர்கேவி ரோடு, மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் கிரைம் போலீசார் அந்தப் பகுதியில் வரும் தனியார் பஸ், அரசு பஸ், மினிபஸ்களில் வரும் பயணிகளை சோதனை செய்தனர்.

போலீசார் சோதனையில் சந்தேகப்படும் நபர்கள் யாராவது இருந்தால் அந்த நபர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினார்கள். அப்படிப்பட்ட நபர்களின் பெயர் முகவரி செய்யும் வேலை, அந்த நபர்களை போட்டோ எடுத்து பிறகு விடுவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் கூறும்போது,

தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கும் வகையிலும் திடீர் வாகன சோதனை மேற்கொண்டோம். சமீபகாலமாக தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தாமல் பொது மக்களோடு மக்களாக பஸ்ஸில் பயணம் செய்தது எங்களுக்கு தெரியவந்தது. இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முக்கியமான பகுதிகளில் வரும் பஸ்கள், தனியார் பஸ் அரசு பஸ் மினிபஸ் என அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்தோம்.

இதில் உள்ளூர் வெளியூர் வெளிமாவட்ட பேரூந்துகளும் சோதனை செய்யப்பட்டது. சென்ற முறை இவ்வாறு சோதனை செய்தபோது பஸ் பயணிகளிடம் கைவரிசை காட்டிய நாலு பெண்களை கைது செய்தோம். தொடர்ந்து இதேபோன்று திடீர் சோதனை அடிக்கடி நடக்கும் என கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT