ADVERTISEMENT

தொடரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம்! போக்குவரத்துத் துண்டிப்பு! விளைநிலங்கள் நாசம்!

06:16 PM Dec 05, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை மற்றும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அதிகபட்சமாக, சிதம்பரத்தில் 36 செ.மீ மழைப் பதிவானது. மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளிலிந்து 35,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கனமழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பண்ருட்டி அருகேயுள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்த, முருகன் என்பவரது மகள், 3-ஆம் வகுப்பு படிக்கும் சஞ்சனா(10) என்ற சிறுமி உயிரிழந்தார். பெரியகாட்டுப் பாளையத்தைச் சேர்ந்த தனமயில்(55) என்ற மூதாட்டியும் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

மாவட்டத்தில் கனமழை பொழிவதன் காரணமாக, வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து, 6,500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, கிராம மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரி நிரம்பியதால், ஏரியிலிருந்து வினாடிக்கு 9,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், கீழ்ப் பரவனாற்றின் கரையோரப் பகுதியிலுள்ள 23 கிராமங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள கொளக்குடி கிராமத்தை, நீர் சூழ்ந்ததால் அக்கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவித்த நிலையில், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில், பேரிடர் மீட்புக் குழு மற்றும் காவல்துறையினர் படகு மூலம், மக்களை மீட்டு பாதுகாப்பு முகாமில் தங்க வைத்தனர்.

திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 15 அடியாக உயர்ந்துள்ளது. அதையடுத்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி, திட்டக்குடி – தொழுதூர் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.

கடலூர் - சிதம்பரம் சாலையில், காரைக்காடு பகுதியில் வெள்ளநீர் அதிகமாகச் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் குள்ளஞ்சாவடி வழியாக மாற்றி விடப்பட்டன. குள்ளஞ்சாவடி - ஆலப்பாக்கம் சாலையிலும் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. இதேபோல் பரவனாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வடலூர் - சேத்தியாத்தோப்பு சாலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்புவதாலும், வடிகால் வாய்க்கால்கள் பராமரிக்கப்படாததாலும் விளை நிலங்களிலும், கிராமப் பகுதிகளிலுள்ள தெருக்கள் மற்றும் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்றவும், வடிகால்களைச் சரி செய்யவும் கோரி, சித்தலூர் மக்கள் விருத்தாசலம் புறவழிச்சாலையில் மறியல் செய்தனர்.

வெள்ளாற்றில் பெண்ணாடம் அருகே செளந்தர சோழபுரத்தில் அரியலூர் – கடலூர் மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 25 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கிடையேயான போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.

மன்னம்பாடி கிராம ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் ஓடையின் வழியாகச் செல்வதினால் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையே போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது.


நெய்வேலி என்.எல்.சி சுரங்கப் பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளதால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சுரங்கப் பகுதிகளின் மண் மேட்டிலிருந்து கரைந்துவரும் மண் கலந்தநீரால் கம்மாபுரம், கோபாலபுரம், கீனனூர், கொம்பாடிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலுள்ள 1,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளன.

மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள், தண்ணீரில் மூழ்கியதால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

“தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான முகாம்களில் தங்கவேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT