ADVERTISEMENT

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி!!

11:29 AM Feb 17, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் கைதான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனின் ஜாமீன் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி ஒய்வுபெற்ற சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள், பெண் பணியாளர்கள் ஆகியோரைக் குறித்து அவதூறாகப் பேசி, பல விடியோக்களை வெளியிட்டார்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் தேவிகா கொடுத்த புகாரில், ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் (2020) கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி, சென்னை மாநகரக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சி.எஸ்.கர்ணன் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு, இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, கடந்த 2017ஆம் ஆண்டு முதலே தான் கடும் மன அழுத்தத்திலும், விரக்தியிலும் இருந்துவந்த நிலையில், நீதிபதிகள் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாகவும், தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் சி.எஸ்.கர்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் எச்சரித்தப் பின்னரும், நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண்கள் குறித்து 20 அவதூறு வீடியோக்களை கர்ணன் வெளியிட்டதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாரதிதாசன், ஜாமீன் கோரிய சி.எஸ்.கர்ணனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT