ADVERTISEMENT

ஆராய்ச்சி மாணவர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்!!!

10:06 AM Nov 09, 2019 | Anonymous (not verified)

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்ததால் பெரும் பரபரப்பு. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் சேர்ந்த காளிமுத்து தனது மனைவி சந்திரவதனா மகன் சிவபிரசாத் ஆகியோருடன் காந்தி கிராம பல்கலைகழகத்திற்கு வந்த அவர் திடீரென நுழைவுவாயிலில் முன்பு தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இது குறித்து காளிமுத்து கூறுகையில் "நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப் பையும் இங்கிலாந்து நாட்டில் சர்ரே பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பயிற்சியும் பெற்று உள்ளேன். எனது சேவைக்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கிடைத்துள்ளது. நீர் மற்றும் கழிவுநீர் பிரிவில் உலக அளவில் தலைசிறந்த 50 நிபுணர்களில் ஒருவர் என்பதற்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது.

நான் தேர்ந்தெடுத்த துறைகளில் பெற்ற அனுபவங்கள் அனைத்தும் பொது மக்களை சென்றடைய வேண்டும் என விரும்பினேன். கடந்த 2008 ஆம் ஆண்டு காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து பல்கலைகழகம் நடத்திய அனைத்து ஆராய்ச்சித் தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழ்களை வைத்துள்ளேன். எனது ஆராய்ச்சி படிப்புக்கு தேவையான விவரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து திரட்டினேன்.

'வேளாண்மை துறையில் பருவநிலை மாறுபாடு' என்ற எனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியை காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 2012ஆம் ஆண்டு நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் நிபுணர்கள் முன்னிலையில் விளக்கினேன். தற்போது எனக்கு பிஎச்டி படித்ததற்கான டாக்டர் பட்டம் வழங்காமல் பல்கலைக்கழகம் தாமதித்து வருகிறது.

இது குறித்து பலமுறை கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது நான் டெல்லியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பதால் தான் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கிறேன்" என்று கூறினார்.

இப்படி காந்திகிராம பல்கலைக்கழகம் முன் காளிமுத்து குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படவே, அம்பாத்துரை போலீசார் உடனே ஸ்பாட்டுக்கு வந்து காளிமுத்துவிடமும் அவர் குடும்பத்தாரிடம் பேசி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் அவர்களிடம் கேட்டபோது, "காளிமுத்து அமெரிக்காவில் முதுகலை பட்டம் படித்து உள்ளார். அமெரிக்காவில் முதுகலைப் படிப்புக்கு ஓராண்டில் 2 செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும், ஆனால் இந்தியாவில் முதுகலைப் படிப்புக்கு இரண்டு ஆண்டுகள் படித்து நான்கு செமஸ்டர் தேர்வுகள் எழுத வேண்டும்.

இதன் காரணமாகவே அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கவில்லை. இந்தியாவில் வேறு ஏதேனும் பல்கலைக்கழகத்தில் இதே போல் வெளிநாட்டில் ஓர் ஆண்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து அதன் பிறகு ஆராய்ச்சி மேற்கொண்ட மாணவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி இருப்பதற்கான சான்று இருந்தால் நாங்களும் வழங்க தயார். இதன் காரணமாகவே அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இவர் சேர்ந்த போது நிர்வாகக்குழு முறையாக ஆய்வு செய்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார். இச்சம்பவம் காந்தி கிராம பல்கலை கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT