ADVERTISEMENT

கோயில் கருவறைத் தீண்டாமை ஒழிப்பிற்காகக் காத்திருக்கிறோம் ... அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை!

10:38 AM May 08, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கோயில் கருவறையில் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது. ஆகமம், ஐதீகம், பாரம்பரியம் என்ற பெயரில் இன்றுவரை இக்கருவறைத் தீண்டாமை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கருவறைத் தீண்டாமைக்கெதிராக தனது இறுதி மூச்சுவரை பாடுபட்ட பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் நோக்கோடு தனது ஆட்சிக் காலத்தில் 1971 இல் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டமியற்றினார் கலைஞர். இதன் நீட்சியாக, 1996-இல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில், உரியப் பயிற்சியும், தகுதியும் உள்ள அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம் என்ற அரசாணை (நிலை எண்.118) பிறப்பிக்கப்பட்டது. மேலும், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” எனத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆகஸ்டு – 22 – 2006 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டத்தின்படி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகிய நான்கு கோயில்களில் சைவத்திற்கும்; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் இரங்கநாதசுவாமி கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் வைணவத்திற்குமான பயிற்சி பள்ளிகளாக அறிவிக்கப்பட்டன. ஆகமவிதிகளின்படி பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு தகுதியும் திறமையும் கொண்ட சமயநெறியாளர்களை கொண்டு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 34 ஆதிதிராவிட மாணவர்கள்; 76 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்; 55 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்; 42 இதர வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் என ஆக மொத்தம் 207 மாணவர்கள் 2006-07 கல்வியாண்டில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை முடித்து அரசு வழங்கிய சான்றிதழோடு பணிநியமனத்திற்காகக் கடந்த 14 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள் இவர்கள். நீதிமன்ற அலைக்கழிப்புகள், அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருவது, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனக் கடந்த 14 ஆண்டுகளாக பணிக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கலைஞரைப் போல மு.க.ஸ்டாலினும் கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டும் விதமாகத் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறார்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

இதுதொடர்பான அவர்களது ஏழு அம்ச கோரிக்கையில்,

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரிய கோயில்கள் – பாடல் பெற்ற தளங்களில் அர்ச்சகர் பயிற்சி முடித்து, தகுதி திறமையோடு இருக்கும் 203 மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

2. தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள சைவ, வைணவப் பயிற்சி நிலையங்களை இந்து அறநிலையத்துறை மீண்டும் தொடங்க வேண்டும்.

3. 2020-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தமிழக அரசு விதிகளில் அர்ச்சகராவதற்கு 35 வயது என்பது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக எங்களுக்கு பணிநியமனம் வழங்கப்படாததைக் கணக்கில் கொண்டு இந்த வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட வேண்டும்.

4. தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறையிடம் மட்டுமே இருக்க வேண்டும்.

5. தமிழ்நாட்டிலுள்ள கார்ப்பரேட் சாமியார்களின் சொத்துக்கள், வருமானங்கள், நில ஆக்கிரமிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.

6. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.

7. சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடைமையாக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைத்துள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உதவ வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலருமான ஆ.ராசா ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

அரசியல் தலைவர்களுடனான இந்த சந்திப்பு குறித்து பேசிய அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன், “அர்ச்சகர் பயிற்சி முடித்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில், எங்களோடு பயிற்சி முடித்த மாணவர்களில் இருவர் இறந்துவிட்டனர். எஞ்சியுள்ளோரில் பலர் வயிற்றுப்பிழைப்புக்காகக் கிடைக்கும் வேலையைச் செய்து காலம் தள்ளி வருகின்றனர். எங்களது பசி போக்க ஒரு வழி கேட்கும் கோரிக்கையாக இதனை அணுகாமல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க தீண்டாமை ஒழிப்பின் ஒரு அடியாக முதல் படியாக எங்களது கோரிக்கையின் அரசியல் நியாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கருவறைத் தீண்டாமையை ஒழிக்க கலைஞர் அவர்கள் தொடங்கிய பணியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்” என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT