ADVERTISEMENT

தடையுத்தரவை மீறி சிறப்பு அதிகாரிகள் நியமனம்: பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு உயர்நிதிமன்றம் கண்டனம்!

08:09 AM Dec 10, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


நீதிமன்ற தடை உத்தரவை மீறி, தனியார் கிளப்பை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகளை நியமித்த பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் உள்ள நாய்கள் பராமரிப்பு கிளப் (கேனியன் கிளப்) நிர்வாக நடவடிக்கைகளில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஏன் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க கூடாது என, பத்திரப்பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து, அந்த கிளப் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, அந்த கிளப்பிற்கு 3 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்ய பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளப் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பத்திரப்பதிவுத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் சென்னை மத்திய பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் கே.கே.மஞ்சுளாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரு அதிகாரிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டீர்களா? அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?. நீதிமன்ற உத்தரவை மீற முடியும் என நினைக்கிறார்களா? இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று தெரிவித்தார்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ‘நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றக் கூடாது என எந்த ஒரு உள்நோக்கமும் அதிகாரிக்கு கிடையாது. நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவு திரும்ப பெறப்படும், அல்லது நிறுத்தி வைக்கப்படும்.’ என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி முடித்து வைத்து உத்தரவிட்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT