Skip to main content

ரேபிட் டெஸ்ட் கருவிகள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய விவகாரம்! -உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020
chennai high court


கரோனா வைரஸ் பரிசோதனைக்குப் பயன்படும் சீன நிறுவனத்தின் ரேபிட் டெஸ்ட் கருவிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசோதனைக்குப் பிறகே,  இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக, மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


கரோனா பரிசோதனைக்கு, தரமற்ற ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகளுக்கு தடை விதித்து, புனே ஆராய்ச்சி நிலையத்தால் அங்கீகரிக்கப்படும் தரமான பரிசோதனை கருவிகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கில் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அமைப்பு பதில் மனு தாக்கல்  செய்துள்ளது. அதில், மருந்துகள் மற்றும் கருவிகளின் தரம் குறித்து  ஆய்வு செய்த பிறகே,  அவற்றை இறக்குமதி செய்யவும்,  தயாரிக்கவும்,  மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்குகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளும், கருவிகளும்  புனேவில் உள்ள  ஆய்வகத்தில்  பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விற்பனைக்கான உரிமம் வழங்கப்படும்.  


கரோனா வைரஸ் பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கிட்டை இறக்குமதி செய்ய மார்ச் 26 முதல் ஏப்ரல் 22 வரை, சீனாவைச் சேர்ந்த குவாங்கோ வான்ஃபோ பயோடெக் (Guanghow wondfo biotech Co.Ltd-China) நிறுவனம் உட்பட, பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் தவறான முடிவுகளைக் காட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 29- ம் தேதி  விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, பரிசோதனை கருவிகளை திருப்பி  அனுப்ப உத்தரவிடப்பட்டது. மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 


இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் ஜூன் 18- ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்