ADVERTISEMENT

‘கடன் வேண்டும்மா பதிவு செய்யுங்கள்’ ரூ. 4 கோடி வசூலித்த கம்பெனி!

11:26 AM Feb 15, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏலசீட்டு, தீபாவளி சீட்டு, வான்கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என்கிற பெயரில் பொதுமக்களிடம் அதிக வட்டி ஆசைக்காட்டி பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுவது ஒருவகையென்றால் மற்றொருபுறம் குறைந்த வட்டிக்கு கடன், தவணைக்கடன், வங்கி கடன் வாங்கித்தருகிறோம் என்கிற பெயரில் மோசடி கும்பல்கள் உலா வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி பகுதிகளில் மைக்ரோபைனான்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாகக்கூறி ஏழை பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் 1350 ரூபாய் என ஆயிரக் கணக்கானவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளது ஒரு பைனான்ஸ் நிறுவனம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியில் என்.பி.எல் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ஆம்பூர், உமராபாத், பேரணாம்பட்டு, குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமப்புற மக்களிடம், கடன் தருகிறோம், அதற்கு நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும், காப்பீடு எடுக்க வேண்டும் எனச்சொல்லி ஒவ்வொருவரிடமும் 1350 ரூபாய் பணம் வாங்கியுள்ளார்கள். இதற்காக துத்திப்பட்டில் இருந்த அலுவலகத்துக்கும் கடன் கேட்டவர்களை வரச்சொல்லி பணம் வசூல் செய்துள்ளார்கள்.


இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி காலை கடன் கேட்டு பணம் கட்டியவர்கள் அந்த அலுவலகத்துக்கு வர, அந்த அலுவலகம் பூட்டப்பட்டு இருந்துள்ளது. அந்த அலுவலகத்தில் பணியாற்றியதாக கூறியவர்களின் செல்போன் எண்களில் தொடர்புக்கொண்டபோது அதுவும் சுச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இந்த தகவல் தெரிந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அங்கு வந்து குவிந்துள்ளனர்.

காவல்துறைக்கும் இதுக்குறித்த புகார் செல்ல அவர்களும் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். கடன் தருவதாக மட்டும் அட்வான்ஸ் வாங்கவில்லை, ஆர்.டி, பிக்ஸட் டெப்பாசிட், சேமிப்பு போன்றவை மூலமாகவும் பணம் கட்டலாம் எனச்சொல்லியும் பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆம்பூர் பகுதியில் 3.60 கோடி, வாணியம்பாடி 25 லட்சம், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி என இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு இப்படி வசூலித்துள்ளார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவர்களின் விசாரணையில்தான், நிறுவனத்தின் உரிமையாளர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என்று தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றுபவர்கள் விதவிதமான திட்டங்களோடு பொதுமக்களை நெருங்கிவந்து ஏமாற்றத்தான் செய்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மக்கள் ஏமாந்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT