
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி அருந்ததியர் காலனி பகுதியில் வசிப்பவர் பெருமாள், ஜெயப்பிரதா தம்பதியின் மகள் ஜீவிதா (18). இவர் பர்கூர் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் இவருடைய தாயின் சகோதரர் சரண்ராஜ் (30). ஜீவிதாவை ஒருதலை பட்சமாக காதலித்து வருவதாக தெரிகிறது.
புகைப்பட கலைஞராகவும் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வரும் சரண்ராஜ், தன்னுடைய அக்கா ஜெயப்பிரதாவிடம் ஜீவிதாவை திருமணம் செய்து வைக்க ஒப்புதல் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைதாகி இருந்த தன்னுடைய தம்பி சரண்ராஜ்க்கு மகளை திருமணம் செய்து வைக்க விரும்பாததால் மறுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜீவிதாவை வழிமறித்த அவரின் தாய்மாமன் சரண்ராஜ், அம்மா வீட்டில் இல்லை எனக் கூறி மாணவியை வீட்டிற்கு அனுப்பாமல், அவருடைய பாட்டி சியாமளா வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத சமயத்தில் ஜீவிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
சம்பவ இடத்திலேயே மெத்தை மீது ரத்த வெள்ளத்தில் இருந்த ஜீவிதாவை வாணியம்பாடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நாட்டறம்பள்ளி காவல்துறையினர் மீட்டு, உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சரண்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் அவரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சரண்ராஜை நாட்டறம்பள்ளி காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.